2010-11-17 15:01:19

வத்திக்கான் தொலைக்காட்சி மையத்தின் புதிய ஒளிபரப்பு வாகனத்தைத் திருத்தந்தை அர்ச்சித்தார்


நவ.17, 2010. வத்திக்கான் தொலைக்காட்சி மையம் மிகத் துல்லியமான காட்சிகளைப் பதிவு செய்யும் திறமை பெற்ற High Definition தொழிநுட்பத்துடன் கூடிய ஒளிபரப்புக் கருவிகளைப் பயன்படுத்த உள்ளது.
இந்தப் புதிய முயற்சியின் முதல் கட்டமாக, வத்திக்கான் தொலைக்காட்சி மையத்தின் மிக உயர்ந்த தொழில் நுட்பங்கள் அடங்கிய புதிய ஒளிபரப்பு வாகனம் ஒன்றை இப்புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் திருத்தந்தை அர்ச்சித்தார்.
"திருப்பீடம் உலகத்துடன் கொள்ளும் தொடர்பில் புதிய தொழில் நுட்பங்கள்" என்ற கருத்துடன் இச்செவ்வாயன்று செய்தியாளர்களுடன் நடத்திய கூட்டத்தில், திருப்பீடத்தின் சமூகத் தொடர்பு அவையின் தலைவர் பேராயர் Claudio Maria Celli இப்புதிய முயற்சி குறித்து பேசினார்.
வத்திக்கான் தொலைக்காட்சி மையத்தின் இயக்குனர் பெடெரிகோ லோம்பார்தி, Knights of Colombus அமைப்பின் தலைவர் மற்றும் Sony Italia நிறுவனத்தின் மேலாளர் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.
ஒவ்வோர் ஆண்டும் வத்திகான் தொலைக்காட்சி மையம் 200க்கும் அதிகமான நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதாலும், இன்றைய காலகட்டத்தில் High Definition தொழில் நுட்பம் உலகெங்கும் உள்ள தொலைகாட்சிகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதாலும் வத்திக்கான் இம்முயற்சியை ஆரம்பித்துள்ளதென்று வத்திக்கான் தொலைக்காட்சி மையத்தின் இயக்குனர் அருள்தந்தை லோம்பார்தி கூறினார்.அறுபது இலட்சம் டாலர் மதிப்புள்ள இந்த ஒளிபரப்பு வாகனத்தில் 16 விடியோ காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றும், இந்தப் புதிய தொழில் நுட்பத்தால் முப்பரிமாண (3D) முறை ஒளிபரப்புக்களையும் மேற்கொள்ள முடியும் என்று செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.