2010-11-17 15:02:39

கிறிஸ்தவர்கள் மீது காட்டப்படும் வன்முறைகள் குறித்து மத்தியப்பிரதேச உயர் நீதி மன்றம் விளக்கம் கேட்டுள்ளது


நவ.17, 2010. கிறிஸ்தவர்கள் மீது காட்டப்படும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த அரசும், காவல் துறையும் எவ்விதம் செயல்பட்டிருக்கிறதென்று இந்தியாவின் மத்தியப்பிரதேச உயர் நீதி மன்றம் அம்மாநில அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.
கிறிஸ்தவர்கள் வன்முறைகளுக்கு ஆளாகும் போது, அவர்களைப் பாதுகாப்பதற்கு பதிலாக, அரசு அதிகாரிகளும், காவல் துறையினரும் கிறிஸ்தவர்களை மேலும் வதைக்கின்றனர் என்பதால், தாங்கள் நீதி மன்றத்தின் உதவியை நாடியதாக, மத்திய பிரதேச தலத் திருச்சபையின் சார்பில் பேசிய அருள்தந்தை ஆனந்த் முட்டுங்கல் கூறினார்.
2003ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்ததிலிருந்து, கிறிஸ்தவர்கள் தொடர்ந்து வன்முறைகளுக்கு ஆளாகின்றனர் என்று கூறிய அருள்தந்தை முட்டுங்கல், காவல் துறையிடம் இது குறித்து புகார்கள் கூறும் வேளையில், அவர்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக பொய் வழக்குகள் பதிவு செய்வது அதிகரித்து வருகிறதென்று மேலும் கூறினார்.
கடந்த ஆறு அல்லது ஏழு ஆண்டுகளாக கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவ நிறுவனங்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வந்திருப்பதால், நீதி மன்றத்தின் உதவியைத் தாங்கள் நாடியிருப்பதாகத் தெரிவித்தார் அருள்தந்தை முட்டுங்கல்.
நீதி மன்றம் அரசின் உள்துறை அமைச்சகத்திடம் இருந்தும், காவல்துறை மேலதிகாரிகளிடம் இருந்தும் நான்கு வாரங்களுக்குள் விளக்கங்கள் கேட்டுள்ளதென்று செய்திகள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.