2010-11-16 15:39:09

நாட்டில் அமைதிக் காப்பாளர்களின் தேவை குறித்து சூடான் ஆயர்கள்


நவ 16, 2010. சூடான் நாட்டை இரண்டாகப் பிரிப்பது குறித்த மக்கள் கருத்து வாக்கெடுப்பு வரும் ஜனவரியில் இடம்பெற உள்ள நிலையில், அரசியல் வன்முறைகளிலிருந்து அனைவரும் விலகியிருக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை இருப்பினும், அச்சம், நிலையற்ற தன்மை மற்றும் ஏமாற்றம் என்பவை மக்களைச் சுமையாகத் தாக்கிவருவதாகக் கவலையையும் வெளியிட்டனர் சூடான் ஆயர்கள்.

மக்களின் கருத்து வாக்கெடுப்பின் முடிவுகள் அரசால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு நிலை ஏற்பட்டால், உடனடியாகச் சர்வதேச சமுதாயம் தலையிட வேண்டிய அவசியம் இருப்பதையும் ஆயர்கள் தங்கள் அண்மை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சூடான் நாடு பிரிந்து போக உள்ளதா அல்லது ஒரே நாடாக தொடர உள்ளதா என்பது முக்கியமில்லை, ஏனெனில் பிரிக்கப்பட்டாலும் அது நிலப்பகுதியின் பிரிவாகத்தான் இருக்குமே ஒழிய மக்களின் பிரிவினையாக இருக்காது எனத் தங்கள் அறிக்கையில் மேலும் கூறியுள்ளனர் ஆயர்கள்.

சூடான் நாட்டில் 1983ம் ஆண்டு துவங்கிய உள்நாட்டு மோதலை முடிவுக்குக் கொணர்ந்த 2005ம் ஆண்டு அமைதி ஒப்பந்தத்தின்படி, தென் சூடானை தனியாகப் பிரித்து தனிநாடாக அறிவிப்பது குறித்த மக்கள் கருத்து வாக்கெடுப்பு, வரும் ஆண்டு ஜனவரி மாதம் 9ந்தேதி இடம்பெற உள்ளது.








All the contents on this site are copyrighted ©.