2010-11-15 14:25:16

நவம்பர் 16 நாளும் ஒரு நல்லெண்ணம்


“நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன்” (1கொரி. 13: 1)

ஒரு காலத்தில் மனித சமுதாயம் முழுவதும் ஒரே இனமாக இருந்து ஒரே மொழி பேசியது. அப்போது மனிதனின் ஆன்மீக இயல்பைச் சுயநலம் செல்லரித்தது. மனிதன் தன்னை மகிமைப்படுத்த விரும்பினான். எனவே மனிதர் எல்லாரும் இணைந்து, ″வாருங்கள், உலகம் முழுவதும் நாம் சிதறுண்டு போகாதபடி வானளாவிய கோபுரம் கொண்ட நகர் ஒன்றை நமக்காகக் கட்டி எழுப்பி, நமது பெயரை நிலை நாட்டுவோம்″ என்று சொல்லிக் கோபுரம் கட்டத் தொடங்கினர். ஆனால் கடவுள் அவர்களின் பெருமையைக் குலைக்கும் வண்ணம் அவர்களைச் சிதறுண்டுப் போகச் செய்தார்.

மனிதனின் “தான்” என்ற அகந்தை சகித்துக் கொள்ள முடியாததாக இருக்கின்றது. அவனின் இந்தச் சுயநலம்தான் பல்வேறு சகிப்பற்ற நிலைகளுக்கு வித்திட்டு அவனின் அகத்திலும் புறத்திலும் அமைதியைக் குலைக்கின்றது. Ralph W. Sockman என்பவர் சொன்னார் : “நாம் சிறுபான்மையாக இருக்கும் போது நமது தைரியத்தைப் பரிசோதிப்பது நடக்கின்றது. நாம் பெரும்பான்மையாக இருக்கும் போது நமது சகிப்புத்தன்மையைப் பரிசோதிப்பது நடக்கின்றது” என்று. சகிப்புத்தன்மை நமது உள்ளார்ந்தச் சக்தியை ஆழப்படுத்தி உள்ளத்தில் அமைதியை ஏற்படுத்துகின்றது. அகத்தில் அமைதியை அனுபவிப்பவர் தன்னைச் சூழ்ந்துள்ள எல்லாரோடும் அமைதியில் வாழ்வார். "மற்றவர்கள் உன்னை எப்படி நடத்த விரும்புகிறாயோ அப்படி மற்றவரை நீ நடத்து"

நவம்பர் 16 உலக சகிப்புத்தன்மை நாள்

உலக சகிப்புத் தன்மை நாள் என்பது மக்களிடையே சகிப்புணர்வின்மையின் பயங்கரமான விளைவுகளையும் சகிப்புத்தன்மை மற்றும் அகிம்சையின் தேவையை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுவதற்காகவும் உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் நவம்பர் 16 அன்று கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும். இத்தினம் 1995 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் வெளியிடப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.