2010-11-15 14:44:46

நவம்பர் 15 நாளும் ஒரு நல்லெண்ணம்


ஒருசமயம் ஹாகுய்ன் என்ற சென்குருவை படைத்தளபதி ஒருவர் சந்திக்கச் சென்றார். ஹாகுய்னை வணங்கிய தளபதி, குருவே சுவர்க்கம் நரகம் உண்டா என்று கேட்டார். அதற்கு குரு, நீ யார் என்று வினவினார். நான் ஒரு சமுராய் என்றார் தளபதி. சமுராய் என்பது ஜப்பானில் வீரப்பரம்பரையைக் குறிக்கும். சரி, சாப்பாட்டுக்கு என்ன செய்கிறாய் என்று குரு கேட்டதும், நான் சமுராய் என்று சொன்ன பிறகும் இப்படிக் கேட்கிறாரே என்று நினைத்தாலும், பொங்கி எழுந்த கோபத்தை அடக்கிக் கொண்டு நான் ஒரு தளபதி என்றார் அவர். ஹ ஹ ஹ என்று உரக்கச் சிரித்த குரு, எந்த மடையன் உன்னைத் தளபதியாக வைத்துக் கொண்டிருக்கிறான். நீ எனக்குக் கறிக்கடைக்காரன் போல் தோற்றமளிக்கிறாய் என்றார். உடனே தளபதி, உங்களை வெட்டிவிடப் போகிறேன் என்று தனது இடைவாளை உருவி ஓங்கினான். அப்போது அந்தச் ஜென்குரு, இதோ இதுதான் நரக வாசல் என்றார். தளபதி புத்திசாலி. கோபம் தணிந்து குருவின் காலில் விழுந்தார். மன்னிப்பு கேட்டார். தனது வாளை மீண்டும் இடையில் செருகினார். உடனே குரு, இதுதான் சொர்க்க வாசல் என்றார். சுவர்க்கம் நரகம் இவை அந்தரத்தில் இல்லை. அவை ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கின்றன என்றார் சென்குரு.

இருப்பதை இருக்கும் இடம் விட்டு இல்லாத இடத்தில் தேடி நேரத்தை வீணடிப்பது ஏனோ?








All the contents on this site are copyrighted ©.