2010-11-15 14:32:10

எக்காரணத்தைக் கொண்டும் நம்பிக்கையை இழக்காதே


நவ.15,2010. ஒருபக்கம் ஆனந்தம், இன்னொரு பக்கம் அழுகை, வேறொரு பக்கம் குழப்பம், மற்றொரு பக்கம் புது சகாப்தம் என்று உலகம் நகர்ந்து கொண்டிருக்கின்றது. இந்நாட்களில் உலகெங்கும் அதிலும் சிறப்பாக மியான்மாரில் எங்கு நோக்கினும் மகிழ்ச்சி, ஆரவாரம், புது நம்பிக்கை. மியான்மாரின் ஜனநாயகத் தலைவர் ஆங் சான் சூ கீ, 15 ஆண்டுகள் வீட்டுக் காவலுக்குப் பின்னர் இச்சனிக்கிழமை (நவம்பர் 13) விடுதலை செய்யப்பட்டார். சூ கீ ஓர் உறுதியான அரசியல் பின்னணியைக் கொண்டவர். இவரது தந்தை ஆங் சான், மியான்மாரின் தேசத் தந்தையாகக் கருதப்படுபவர். 1947 இல் பிரித்தானிய ஆட்சியிலிருந்து மியான்மாருக்கு விடுதலைப் பெற்றுத் தந்தவர். ஆயினும் அதே ஆண்டில் இராணுவ அதிகாரிகளால் அவர் படுகொலை செய்யப்பட்டார். அப்போது இரண்டு வயதுக் குழந்தையாக இருந்த சூ கி, தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். 1960 இல் சூ கி, இந்தியாவுக்கான மியான்மார் தூதராக நியமிக்கப்பட்டார். அப்போது தில்லியில் லேடி ஸ்ரீராம் கல்லூரியில் அரசியலில் இளங்கலை பட்டம் பெற்றார். 1969 இல் இலண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். அதன் பின்னர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் குடியேறிய அவர், ஐ.நா.நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். 1972 இல் பிரிட்டனைச் சேர்ந்த மைக்கேல் ஆரிஸ் என்பவரைத் திருமணம் செய்தார். இலண்டனில் குடியேறியத் தம்பதியினருக்கு அலெக்சாண்டர் ஆரிஸ், கிம் ஆகிய இரண்டு குழந்தைகள் பிறந்தன. இலண்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தனது தாயைப் பார்க்க 1988 இல் மியான்மாருக்குத் திரும்பினார். அப்போதுதான் அவரது அரசியல் வாழ்க்கை ஆரம்பமானது. இராணுவ ஆட்சியாளர்களின் பிடியில் சிக்கித் தவித்த மக்களை மீட்க, 1988ம் ஆண்டு செப்டம்பர் 27-ல் NLD என்ற தேசிய ஜனநாயக லீக் என்ற கட்சியைத் தொடங்கி மகாத்மா காந்தியின் பாதையில் அகிம்சை வழியில் போராடினார். அவரது எழுச்சியைத் தடுக்கத் திட்டமிட்ட இராணுவ ஆட்சியாளர்கள் 1989 ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி அவரை வீட்டுக் காவலில் சிறைவைத்தனர். அவர் காவலில் இருக்கும்போதே 1990இல் அங்கு பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் சூ கியின் கட்சி, 59 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றது. ஆனால், அந்தத் தேர்தலை இரத்து செய்த இராணுவ ஆட்சியாளர்கள் சூ கி யைத் தொடர்ந்து வீட்டுக் காவலில் வைத்தனர். 1991 இல் அவருக்கு அமைதிக்கான நொபெல் பரிசு வழங்கப்பட்டது. கடந்த சுமார் 21 ஆண்டுகளாக மியான்மாரில் ஜனநாயகம் மலரப் போராடி வரும் சூ கி, 15 ஆண்டுகள் வீட்டுக் காவலில் இருந்துள்ளார். மியான்மாரில் கடந்த இருபது ஆண்டுகளில் இம்மாதம் 7ம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் அந்நாட்டு இராணுவ அரசு ஆதரவு பெற்ற அரசியல் கட்சி வெற்றியடைந்தது. இந்த ஓட்டெடுப்பும் பரவலாக் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. சூ கியின் ஜனநாயகக் கட்சி இந்தத் தேர்தலைப் புறக்கணித்தது.

இந்த தேர்தல் நடந்த ஏழு நாட்களுக்குப் பின்னர், மியான்மார் இராணுவ அதிகாரிகள் சூ கியை விடுதலை செய்துள்ளனர். வீட்டுக் காவலிலிருந்து வெளியே வந்த 65 வயதாகும் சூ கி அங்கு கூடியிருந்த திரளான மக்களைப் பார்த்து, “நான் தனியாக எதுவும் செய்ய முடியாது, நாம் எல்லாரும் ஒன்று சேர்ந்து செயல்பட்டால் நிறைய காரியங்களைச் சாதிக்கலாம்” என்று சொன்னார். “என்னைச் சிறையில் வைத்திருந்தவர்கள் பற்றி எனக்கு எந்தவித எதிர்மறை உணர்வுகளும் கிடையாது” என்றார். இப்போது சூ கி, அந்நாட்டு இராணுவத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும், ஜனநாயக மியான்மாரை உருவாக்குவதற்கு அமைதிப் புரட்சியில் ஈடுபடவிருப்பதாகவும் கூறியுள்ளார். இஞ்ஞாயிறன்று இவரது NLD கட்சித் தலைமையகம் முன்பு கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அவர், RealAudioMP3 “நம்பிக்கையை இழப்பதற்கு எந்தக் காரணமும் கிடையாது, எனக்குச் சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் மீது நம்பிக்கை உள்ளது. இதற்காக நான் என்றும் போராடுவேன். தங்களுடைய இலட்சியங்களை எப்படி அடைவது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்” என்று கூறினார். சூ கி மீண்டும் அரசியலில் வலம் வருவார் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சொமாலி கடற்கொள்ளையர்களால் ஏறத்தாழ ஓராண்டு பிணையலில் வைக்கப்பட்டிருந்த ஒரு பிரிட்டன் தம்பதியரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கென்ட் நகரைச் சேர்ந்த 60 வயது பவுல், 56 வயது ராக்கேல் Chandler தம்பதியர் 2009ம் ஆண்டு அக்டோபரில் Seychelles தீவுக்கு அருகில் அவர்களது உல்லாசப் படகிலிருந்து சிறைப்படுத்தப்பட்டனர். இவர்கள் தங்களது விடுதலை குறித்து "மிகவும் மகிழ்ச்சியடைவதாக" கூறியுள்ளனர். இவர்கள் மட்டுமல்ல இவர்களது ஒட்டுமொத்தக் குடும்பமும் நாடும் இப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கின்றது.

இந்தியாவில் நவம்பர் 5ம் தேதி நாடெங்கும் தீபாவளி கொண்டாடப்பட்டது. ஆனால் கோயம்புத்தூர் மக்கள் 9ம் தேதிதான் பட்டாசு வெடித்துத் தீபாவளிக் கொண்டாடியிருக்கிறார்கள். பத்துவயதுச் சிறுமி முஸ்கினையும், அவளது தம்பி ரித்திக்கையும் கொன்ற மோகனகிருஷ்ணன் என்ற சூரனுக்கு முடிவு கட்டியதை அவர்கள் உற்சாகமாகக் கொண்டாடினார்கள். இந்தச் சிறார்க் கொலையால் கொதித்துப் போன மக்கள் ‘கைது செய்யப்பட்ட கொடூரன்கள் மோகன் ராஜையும், அவனது கூட்டாளி மனோகரனையும் தூக்கில் போட வேண்டும்’ என்று கோஷங்கள் எழுப்பத் தொடங்கினர். ‘‘அவனை விஷ ஊசி போட்டுக் கொல்ல வேண்டும். கை கால்களையும் உடல் உறுப்புகளையும் ஒவ்வொன்றாக வெட்டி அணு அணுவாக சித்திரவதை செய்து கொல்ல வேண்டும்’ என்றெல்லாம் ஆவேசப்பட்ட மக்களின் மனம் இந்த என்கவுன்ட்டரால் குளிர்ந்திருக்கிறது என்று தினத்தாள்கள் சொல்லியிருந்தன. கோவையில் வாழும் வடஇந்தியர்கள் பலர் தீபாவளிப் பண்டிகையே கொண்டாடவில்லை. ‘எங்களுக்கு இன்றுதான் நரகாசுரன் அழிக்கப்பட்ட நாள். இன்றைக்குத்தான் தீபாவளி!’ என்று சொல்லி மகிழ்ச்சியடைந்ததைக் காண முடிந்தது என்றும் சொல்லப்படுகிறது.

நேயர்களே, அன்றாடம் நடக்கும் பல நிகழ்வுகள் தனிப்பட்டவர் வாழ்க்கையிலும் பொது வாழ்க்கையிலும் நம்பிக்கையையும் புத்தொளியையும் புதுத்தெம்பையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றன. நாம் எல்லாரும் மகிழ்ச்சியாக வாழவே விரும்புகிறோம். இரவு பகல், வெயில் மழை, நோய் நோக்காடு என்றெல்லாம் பாராது கஷ்டப்பட்டு பணம், பதவி, பட்டம், சமூகத்தில் ஓர் அங்கீகாரம் போன்றவற்றைச் சமபாதிக்கிறோம். ஆனாலும் நாம் தேடும் மனமகிழ்ச்சி கிட்டுவதில்லை. ஏதாவது சொல்லிக் குறைபட்டுக் கொண்டே இருக்கிறோம். 'எவ்ளோ சம்பாதிச்சு என்ன பிரயோஜனம் சார்? வாழ்க்கையில நிம்மதி இல்லையே, சந்தோஷம் இல்லையே!’ என்று புலம்பவும் செய்கிறோம். அதேசமயம் குறைந்த பொருளோடு புகழோ, சமூகத்தில் மரியாதையோ இல்லாத சாதாரண மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ்வதையும் பார்க்கிறோம். இது எப்படி இவர்களுக்குச் சாத்தியமாகின்றது?

இப்படி சிந்தித்த டாக்டர் ஜான் இஜ்ஜோ என்பவர், அறுபது வயதை எட்டியப் பலரை பேட்டி கண்டார். அப்பேட்டியின் முடிவாக அவர் ஐந்து விடயங்களை ஆலோசனைகளாகத் தருகிறார். முதலாவதாக, உங்களுக்கு நீங்களே உண்மையாக இருங்கள்! அதாவது உங்கள் வாழ்க்கைப் பாதைக்குப் பிறரின் ஆலோசனையைக் கேளுங்கள். ஆனால் கடைசியில் முடிவு உங்களுடையதாக இருக்க வேண்டும்.

இரண்டாவதாக, கடந்த காலத்தைப் பற்றிய எந்தவித வருத்தமும் இல்லாமல் இருக்கப் பழகுங்கள். பலர் கடந்த காலத்திலே மூழ்கி நிகழ்காலத்தில் வாழ்வதைத் தவற விட்டுவிடுவார்கள். கடந்த வாரத்தில் பிபிசியில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அமெரிக்க ஐக்கிய நாட்டு ஹார்வர்டு குழு 2200 பேரிடம் எடுத்த ஆய்வில், “மக்கள் தாங்கள் விழித்திருக்கும் நேரங்களில் பாதி நேரத்தைப் பகல் கனவு காண்பதிலே கழித்து விடுகிறார்கள்” என்று தெரிய வந்துள்ளது. இவ்வாய்வை நடத்திய குழுவில் ஒருவரான டாக்டர் மாத்யூ கில்லிங்ஸ்வெர்த், தான் செய்யும் வேலையிலிருந்து அதிகமாகக் கவனம் சிதறி இருப்பவர்கள் மகிழ்ச்சியின்றி இருப்பதாகத் தெரிகிறது, அலைபாயும் மனது மகிழ்ச்சியற்றதாக இருக்கின்றது. அதேநேரம் உடற்பயிற்சி செய்வோர். உரையாடுவோர், அன்பு செய்வோர் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்று சொல்கிறார்.

மூன்றவதாக, அன்பை அள்ளி அள்ளிக் கொடுங்கள். நாம் பிறர் மீது மலரை வீசினால் அது நறுமணமாக நம்மிடம் திரும்பி வரும். என்னைப் பிறர் அன்பு செய்கிறார்கள் என்று உள்ளார்ந்து உணர்பவர் மகிழ்ச்சியோடு வாழ்கிறார், எதையும் முனைப்பாகச் செய்கிறார் என்கிறார் டாக்டர் இஜ்ஜோ.

நான்காவதாக, இந்தக் கணத்தை அனுபவியுங்கள். நிகழ்காலத்தில் வாழுங்கள். அமெரிக்க ஹார்வர்டு குழுவின் ஆய்வும் நிகழ்காலத்தில் வாழ்பவரே மகிழ்ச்சியாக வாழ்கின்றார் என்று கண்டுபிடித்துள்ளது.

ஐந்தாவதாக, உலகம் உங்களுக்கு என்ன தருகிறதோ, அதைவிட அதிகமாகத் திருப்பிக் கொடுங்கள்! பணமோ, உழைப்போ, எதுவாக இருந்தாலும் அவ்வாறே செய்யுங்கள். கொடுங்கள், உங்களுக்கு அமுக்கிக் அமுக்கி நிரம்பக் கொடுக்கப்படும். நாம் எதை விட்டுச் செல்கின்றோம் என்ற ஒரு வாரம் ஓர் அலசலில், ‘ஒருவர் இந்த உலகத்தை விட்டுச் செல்லும்போது வருங்காலம் அவரை நினைவில் வைத்திருப்பது போல எதையாவது விட்டுச் செல்ல வேண்டும் என்று சொன்னோம். டாக்டர் ஜான் இஜ்ஜோவும் இந்தமாதிரி வாழும் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிரம்பியிருக்கும் என்று தனது ஆய்வில் கண்டதாக முத்தாய்ப்பாகச் சொல்லியிருக்கிறார்!.

நிம்மதியான தூக்கம் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு முக்கியம். துன்பம் வந்துவிட்டால் துவண்டுவிடக் கூடாது. கடந்த 21 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் வீட்டுக் காவலில் இருந்த மியான்மார் சூ கியின் முகத்தில்தான் எத்தனை பூரிப்பு. எக்காரணத்தைக் கொண்டும் நம்பிக்கையை இழக்காதீர்கள் என்று சூ கி சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆம். நம்பிக்கையை இழந்து விட்டால் அத்தோடு மகிழ்ச்சியும் மரணித்து விடும். உலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளின் சந்திக்காத துன்பமே இல்லை. அவரிடம் ஒருமுறை, நீங்கள் இவ்வளவு துன்பத்து மத்தியிலும் பெருமளவு சாதித்திருக்கிறீர்ர்களே எப்படி?’ என்று கேட்டார்களாம். அப்போது அவர் `எந்தத் துன்பமும் மாறிவிடும்’ என்று சொன்னாராம். அதுதான் உண்மையும்கூட. மாற்றம் என்பது தவிர்க்க இயலாதது. எல்லாமே மாறிக் கொண்டிருக்கிறது. வாழ்வில் இன்பம், துன்பம் எல்லாம் மாறிமாறி வரும்.

உங்கள் அனுமதியே இல்லாமல் உங்கள் உடம்பை ஒருவர் அடித்துக் காயப்படுத்திவிட முடியும். ஆனால் உங்களது முழு ஒத்துழைப்பு இல்லாமல் உங்கள் மனத்தை வேறொருவரால் காயப்படுத்தவே முடியாது.








All the contents on this site are copyrighted ©.