2010-11-13 14:03:52

பாக்தாத் சிரிய கத்தோலிக்கப் பேராலயம் மீதானத் தாக்குதல் கொடுஞ்செயல் - பேராயர் சுல்லிக்காட்


நவ.13, 2010 : ஈராக்கின் பாக்தாத் சிரிய கத்தோலிக்கப் பேராலயம் மீதானத் தாக்குதல், “மிகப்பயங்கரமான கொடுஞ்செயல்” என்று ஐ.நா.வுக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் பிரான்சிஸ் சுல்லிக்காட் தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் 31ம் தேதி பாக்தாத் சிரிய கத்தோலிக்கப் பேராலயத்தில் முஸ்லீம் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்களில் இறந்த 58 பேரின் நினைவாக நியுயார்க் ஐ.நா.வுக்கானத் திருப்பீடத் தூதரகத்தில் இவ்வெள்ளி மாலை நடைபெற்ற வழிபாட்டில் இவ்வாறு தெரிவித்தார் பேராயர் சுல்லிக்காட்.

இந்தக் கொடுஞ்செயல் இன்னும் முடிந்ததாகத் தெரியவில்லை என்றுரைத்த பேராயர் சுல்லிக்காட், பகைவர்களை அன்பு செய்யுங்கள், துன்புறுத்துவோருக்காகச் செபியுங்கள் என்று சொல்லி, அமைதிக்கும் ஒப்புரவுக்கும் அழைப்புவிடுத்தார்.

இச்செபவழிபாட்டில் அமெரிக்கா மற்றும் கனடாவுக்கான சிரிய கத்தோலிக்க ஆயர் யூசிப் ஹபாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பேராயர் சுல்லிக்காட் பேராயர் சுல்லிக்கல் இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஐ.நா.வுக்கானத் திருப்பீடத் தூதராக நியமனம் செய்யப்படுவதற்கு முன்னர் அவர் ஈராக் மற்றும் ஜோர்டனின் திருப்பீடத் தூதராக நான்காண்டுகள் பணியாற்றியிருக்கிறார்.

மேலும், அக்டோபர் 31ம் தேதி காயமடைந்த கிறிஸ்தவர்கள் உரோம் ஜெமெல்லி கத்தோலிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்டடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.







All the contents on this site are copyrighted ©.