2010-11-13 14:02:47

திருத்தந்தை- சமூகத் தொடர்புகளும் அவற்றின் மொழிகளும் மனிதக் கலாச்சாரத்தின் முக்கிய கூறுகள்


நவ.13,2010: சமூகத் தொடர்புகள் மற்றும் அவற்றின் மொழிகள் பற்றிப் பேசுவது, உணமையில், இன்றைய உலகு மற்றும் அதன் கலாச்சாரங்களின் முக்கிய கூறுகளில் ஒன்றைத் தொடுவது மட்டுமல்ல, விசுவாசிகளுக்கு இறைவனின் பேருண்மையை அவரின் நன்மைத்தனத்திலும் ஞானத்திலும் அணுகுவதாக இருக்கின்றது என்றார் திருத்தந்தை.

திருப்பீடக் கலாச்சார அவை நடத்திய நான்கு நாள் நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட சுமார் எண்பது பிரதிநிதிகளை இச்சனிக்கிழமை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, தொடர்புகளும் மொழியும் மனிதக் கலாச்சாரத்தின் முக்கிய கூறுகளாக இருக்கின்றன என்றார்.

இக்கூட்டம் நடத்தப்பட்ட, “சமூகத் தொடர்பு மற்றும் புதிய மொழிகளின் கலாச்சாரம்” என்ற தலைப்பை மையமாக வைத்து உரையாற்றிய அவர், பல இளையோர், இன்றைய தொழிற்நுட்பக் கலாச்சாரம் முன்வைக்கும் முடிவற்ற வாய்ப்புக்களில் தங்களை இழக்கின்றனர், அத்துடன் தனிமை மற்றும் அந்நியமாக்கப்படும் உணர்வை அவை அவர்களுக்கு ஏற்படுத்துகின்றன என்றார்.

இதற்காகவேத் திருச்சபை தனது மரபுகளின், சிறப்பாகத் திருவழிபாட்டின் வளமையான மற்றும் ஆழம்பொதிந்த அடையாளங்களை சமூகத் தொடர்பு சாதனங்கள் வழியாக எடுத்துரைக்க வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.

நற்செய்தியின் கலை மற்றும் தொடர்பில் காணப்படும் உருவங்கள் கிறிஸ்தவ வாழ்வின் அழகாக அமைகின்றன என்ற திருத்தந்தை, அன்பு மட்டுமே நம்புவதற்குத் தகுதியுடையதாகும் மற்றும் நம்பத்தக்கதுமாகும் என்று கூறினார்.

புனிதர்கள் மற்றும் மறைசாட்சிகளின் வாழ்க்கை, முழுமையாய் வாழப்பட்ட கிறிஸ்தவ வாழ்வின் அழகை எடுத்துரைப்பதாய் இருக்கின்றது என்றும் கூறிய அவர், ஸ்பெயின் நாட்டு சக்ராதா திருக்குடும்ப பசிலிக்காவின் கலை குறித்தும் விளக்கினார்.








All the contents on this site are copyrighted ©.