2010-11-10 15:06:09

ஸ்பெயின் நாடு மிக அதிக அளவு மதசார்பற்றக் கொள்கைகளைக் கடைபிடிக்கிறது - கர்தினால் Antonio Varela


நவ.10, 2010. திருமணம், குடும்பம், உயிர்களைப் பேணுதல் ஆகிய கருத்துக்களில் ஸ்பெயின் நாடு மிக அதிக அளவு மதசார்பற்றக் கொள்கைகளைக் கடைபிடிக்கிறது என்று மத்ரித் பேராயர் கர்தினால் Antonio Maria Rouco Varela கூறினார்.
கடந்த சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஸ்பெயின் நாட்டுக்கு மேற்கொண்ட திருப்பயணம் குறித்து அந்நாட்டின் வானொலி ஒன்றுக்கு இத்திங்களன்று பேட்டி அளித்த கர்தினால் Varela இவ்வாறு கூறினார்.
இரண்டாம் உலகப் போரின் இறுதியில் மிகப் பரவலாக இருந்த மதசார்பற்ற நிலை, படிப்படியாகக் குறைந்து வந்ததெனவும், இப்போது மீண்டும் அது மிக அதிகமாகப் பரவியுள்ளதெனவும் கர்தினால் Varela தன் வருத்தத்தைத் தெரிவித்தார்.
மதசார்பற்ற கருத்துக்களைக் கடைபிடிப்பதில் ஐரோப்பிய நாடுகளிலேயே ஸ்பெயின் முதலிடம் வகிக்கிறதெனக் கூறிய கர்தினால், இதனால், குடும்பம், திருமணம், கருவில் வளரும் உயிர்களைக் காப்பது போன்ற அடிப்படை மனித பாதுகாப்பு அமைப்புக்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதைக் குறிப்பிட்டார்.ஒரே பாலின திருமணங்களை அங்கீகரிக்கும் சட்டத்தை 2005ம் ஆண்டும், கருவில் வளரும் குழந்தையை பதினான்கு வாரங்கள் வரை கலைப்பதற்கு அரசு உதவி உண்டென்ற சட்டத்தைக் கடந்த ஆண்டும் ஸ்பெயின் அரசு நிறைவேற்றியது என்பது குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.