2010-11-10 15:06:23

போபால் வழக்கில் நீதி கிடைக்க பாரக் ஒபாமாவின் இந்திய பயணத்தின் போது மக்கள் புதுடில்லியில் மேற்கொண்ட போராட்டத்திற்கு போபால் பேராயர் ஆதரவு


நவ.10, 2010. அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் ஒபாமாவின் இந்திய பயணத்தின் போது, போபால் நச்சு வாயுவினால் பாதிக்கப்பட்டோருக்கு இன்னும் நீதி சரிவர கிடைக்கவில்லை என்பதை வலியுறுத்த, மக்கள் புதுடில்லியில் மேற்கொண்ட போராட்டம் சரியான முயற்சி என்று போபால் உயர் மறைமாவட்டப் பேராயர் லியோ கொர்னேலியோ கூறினார்.
1984ம் ஆண்டு Union Carbide தொழிற் சாலையில் நடந்த இந்தப் பெரும் விபத்தில் தப்பித்த 250க்கும் மேற்பட்டவர்கள், புது டில்லிக்கு ஒபாமா இத்திங்கள் சென்றபோது போராட்டம் ஒன்றை நடத்தினர். Union Carbide நிறுவனம் ஓர் அமெரிக்க நிறுவனம் என்பதால், அரசுத்தலைவர் ஒபாமா இந்த வழக்கில் தலையிட்டு நீதி கிடைக்கும் வழிகளைச் செய்து தர வேண்டுமென்று மக்கள் போராடியது ஒரு நீதியான கோரிக்கையே என்று பேராயர் கொர்னேலியோ UCAN செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார்.
கடந்த 25 ஆண்டுகளாக மக்கள் இந்த வழக்கில் போராடி வந்தாலும், தலைவர்களும் அரசுகளும் இதைத் தங்கள் அரசியல் இலாபத்திற்கு மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளனரே தவிர, மக்களுக்கு நீதியான தீர்ப்பு கிடைப்பதில் யாரும் அக்கறை காட்டவில்லை என்று பேராயர் தன் வருத்தத்தைத் தெரிவித்தார்.கடந்த சனிக்கிழமை முதல் இச்செவ்வாய் வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாரக் ஒபாமா, போபால் நச்சு வாயு விபத்து குறித்து எந்த ஒரு இடத்திலும் பேசவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.