2010-11-09 15:44:38

மனித உரிமைகளை ஊக்குவித்தல், சமத்துவமின்மையை ஒழிக்க உதவும் - பேராயர் விகனோ


நவ.09,2010. மத்திய கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவச் சமூகங்கள் எதிர்கொள்ளும் வன்முறையின் பல வடிவங்கள் குற்றங்கள் என்று சொல்லி அவை களையப்படுமாறு திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் உலகக் காவல்துறைகளின் தலைவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

இத்திங்களன்று தோஹாவில் தொடங்கியுள்ள இன்டர்போல் என்ற சர்வதேச காவல்துறை குற்றவியல் நிறுவனத்தின் 79வது கூட்டத்தில் உரையாற்றிய வத்திக்கான் நகர நிர்வாகத்தின் பொதுச் செயலர் பேராயர் Carlo Maria Vigano இவ்வாறு கூறினார்.

நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான போராட்டம் போல, குற்றச்செயல் மனித அனுபவமாகவும், உலக வரலாற்றின் ஓர் அங்கமாகவும் இருக்கின்றது, இதுவே கிறிஸ்தவர்களுக்குக் கடவுளின் மீட்புத் திட்டமாகவும் இருக்கின்றது என்று கூறினார் பேராயர்.

ஒவ்வொரு நாடும் தனது மக்களைப் பாதுகாக்க வேண்டிய அடிப்படைக் கடமையைக் கொண்டுள்ளது என்பதில் சந்தேகமேயில்லை, எனினும், மனித உரிமைகளை ஊக்குவித்தல், பல்வேறு நாடுகளுக்கு இடையேயும் சமூகங்களுக்கு இடையேயும் சமத்துவமின்மையை ஒழிக்க உதவும் என்றும் பேராயர் குறிப்பிட்டார்.

மனித உரிமை மீறப்படும் போது அது பயங்கரவாதமும் வன்முறையும் ஏற்படக் காரணமாக அமைகின்றது என்றார் அவர்.

உலகத் தாராளமயமாக்கல் வளர்ச்சிக்கும் வளமைக்குமான வாய்ப்புக்களை வழங்குவது உண்மையாயினும், இது வறுமை மற்றும் பசி அதிகரிக்கக் காரணமாக அமையும் என்பதும் உண்மை என்றுரைத்த அவர், உலகில் அதிகரித்து வரும் வறுமையும் பசியும், பலவகையான வன்முறைகளைப் பாரபட்சமின்றி அவிழ்த்துவிடும் என்றும் பேராயர் விகனோ கூறினார்.

கத்தார் நாட்டு தோஹாவில் இடம் பெற்று வரும் இந்த நான்கு நாட்கள் கூட்டத்தில், 188 நாடுகள், 65 மாகாண மற்றும் சர்வதேச நிறுவனங்களின் 1200 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இதன் அடுத்த பொது அவைகள், 2011ல் வியட்நாமிலும், 2012ல் இத்தாலியிலும், 2013ல் வெனெசுவேலாவிலும் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.