2010-11-09 15:46:57

இலங்கை தலத்திருச்சபையின் மனித உரிமை பாதுகாப்புப் பணிகள் பாராட்டைப் பெற்றுள்ளன.


நவ 09, 2010. இலங்கையின் வடபகுதியில் மக்களைக் குடியமர்த்தல் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு போன்றவைகளுக்கான தீர்வுகளையும் பரிந்துரைகளையும் முன்வைத்துள்ள தலத்திருச்சபைத் தலைவர்களின் செயல்பாட்டை அந்நாட்டின் கத்தோலிக்கர்கள், புத்த மதத்தினர் மற்றும் ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையினர் பாராட்டியுள்ளனர்.

கடந்த வாரம் இலங்கை அரசுத்தலைவரின் LLRC எனும் ஒப்புரவு அவையின் முன் தங்கள் பரிந்துரைகளை முன் வைத்த தலத்திருச்சபைத் தலைவர்கள், நாட்டின் வட மற்றும் கிழக்குப் பகுதியில் அவசரகால நிலை இன்னும் அமுலில் இருப்பதைக் குறித்த தங்கள் கவலைகளையும் வெளியிட்டனர்.

இச்சந்திப்பு குறித்து ஆசியா நியூஸ் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த இலங்கை காரித்தாஸ் அமைப்பின் தலைவர் குரு. ஜார்ஜ் சிகாமணி, அந்நாட்டின் இனரீதிப் பிரச்னைகளுக்கானத் தீர்வின் ஒரு பகுதியாக , நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் மும்மொழிக் கல்வித்திட்டம் கொண்டுவரவேண்டும் என்ற கொழும்பு பேராயரும் கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ளவருமான பேராயர் மால்கம் ரஞ்சித்தின் பரிந்துரை மிகவும் பயன்தர வல்லது என்றார்.

நாட்டில் அமைதியைக் கட்டி எழுப்புவதிலும், நாட்டு நலனுக்காக உழைப்பதிலும் இலங்கை கத்தோலிக்கத் திருச்சபையின் பங்கு இன்றியமையாதது என மேலும் கூறினார் குரு. சிகாமணி.








All the contents on this site are copyrighted ©.