2010-11-08 15:24:19

யாரும் ஹீரோவாகலாம்


நவ.08,2010. “கருணை பொங்கும் உள்ளம், அது கடவுள் வாழும் இல்லம்”. கவிஞர் கண்ணதாசனின் இந்தப் பாடல் வரிகளுக்குச் சிலரது அசாத்திய வாழ்க்கைத் தொடர்ந்து உயிர் கொடுத்து வருகின்றது. இந்தக் கருணை இதயங்களை, நடமாடும் கோவில்கள், தெய்வப் பிறவிகள், மாமனிதர்கள், மனிதநேயர்கள் என்றெல்லாம் நாம் நெஞ்சார வாழ்த்துகிறோம். அண்மை நாட்களாக தமிழ் ஊடகங்களில் ஒரு கருணை உள்ளம் பற்றிய செய்திகள் பரிமாறப்பட்டு, அவருக்கு வாக்களியுங்கள் என்ற கோரிக்கைகளும் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன. மதுரை நாராயணன் கிருஷ்ணன்தான் இந்தக் காருண்ய இதயத்திற்கு உரிமையாளர். 29 வயதேயான இவரை புகழ்பெற்ற சி.என்.என் இணையதளம், இன்று உலகத்திற்கு பிரபலப்படுத்தியிருக்கிறது. இந்த சி.என்.என்.ஊடகம் நமது நாராயணன் உட்பட உலகின் தலைசிறந்த உண்மையான பத்து ஹீரோக்களைப் புகைப்படத்துடன் பிரசுரித்துள்ளது. இவர்களில் முதலிடத்தில் இருக்கப் போகிறவர் யார் என்பது இம்மாதம் 25ம் தேதி வெளியிடப்படும். இதற்கு முன்னர் 18ம் தேதிக்குள் இவர்தான் தலைசிறந்த ஹீரோ என்பதை நமது வாக்குகள் மூலம் பதிவு செய்ய வேண்டும். அதற்கான வலைத்தள முகவரி /a>

நாராயணன் கிருஷ்ணன் சாதித்திருப்பது என்ன? இவர் சாதித்திருப்பதும், சாதித்து வருவதும் நினைத்துப் பார்க்க முடியாத கருணைச் செயலாக இருக்கின்றது. பொதுவாக நம்மில் பலர் செய்வதென்ன? அழுக்கான கந்தல் ஆடையுடன் அலையும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை அல்லது பசிக்காகக் கையேந்துபவர்களைப் பார்த்தவுடன் பையில் சில சில்லறைக் காசுகளைத் தேடுவோம் அல்லது முகம் சுளித்து ஒதுங்கிச் செல்வோம் அல்லது ஏதாவது வித்தியாசமான வார்த்தைகளைச் சொல்லிவிட்டு நகர்வோம். ஆனால் நாராயணன், கடந்த எட்டு ஆண்டுகளாக ஆதரவற்ற, மனநலம் பாதித்தவர்களை அயராதுத் தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். மதுரையைச் சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில்படும் இத்தகைய மனிதர்களைத் தேடிப்பிடித்து அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார். மழை, புயல், தேர்தல், கலவரம், கடையடைப்பு என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்தச் சேவையைச் செய்து வருகிறார் இவர். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இதுவரை ஒரு கோடியே இருபது இலட்சம் உணவுப் பொட்டலங்கள் இவரால் விநியோகிக்கபட்டுள்ளன. இத்திங்கள்காலை அவரோடு தொலைபேசியில் பேசிய போதுகூட, உதவி செய்யும் இருவர் இன்று வரவில்லை, எனவே நான் தனியாகச் சமைத்துக் கொண்டிருக்கிறேன். மறுநாள் அழையுங்கள் என்றார்.

நேயர்களே, நாராயணன் ஒன்றும் வேலை கிடைக்காத, வாழ வழியில்லாத, திறமையற்ற ஆளும் அல்லர். இவர் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த மற்றும் விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்த இவர் அங்கே ஒரு முதியவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தைக் கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையைத் துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடிச் சென்று உணவு கொடுக்கத் தொடங்கினார். இது நடந்தது 2002ம் ஆண்டில். இன்றும் இவரது சேவை தொடர்கிறது. இவரது தாய் இவர் குறித்து கவலைப்பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் பின்னர் நீங்கள் சொல்வதைக் கேட்கிறேன்” என்று சொல்லி அழைத்துப் போனார். இவரது சேவையைக் கண்டு மனம் உருகிய அந்தத் தாய் ”மகனே நீ இவர்களைப் பார்த்துக்கொள், நான் உயிரோடு இருக்கும்வரை உன்னைப் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார்.

உண்டி கொடுத்தவர் உயிர் கொடுத்தவர். தானத்தில் உயர்தானம் அன்னதானம் என்பார்கள். ஆதரிப்பார் யாருமின்றி அனாதரவாய் அலையும் மனித உயிர்களைக் காக்கும் கருணை உள்ளம் நாராயண கிருஷ்ணன் பற்றிய செய்திகளை நாம் வாசிக்கும் இந்நாட்களில், வேறு சில செய்திகள் நம்மை அதிர்ச்சியடைய வைக்கின்றன. அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவர் ஒபாமாவின் இந்தியப் பயணத்தில் நாளொன்றுக்கு தொள்ளாயிரம் கோடி ரூபாய்ச் செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்ததாக ஓர் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. ஒபாமாவின் பாதுகாப்புக்காக, மும்பைக் கடல் பகுதியில் ஒரு விமானம்தாங்கி கப்பல் உட்பட 34 போர்க் கப்பல்கள். இவருடன் வரும் அதிகாரிகள் தங்குவதற்கு மும்பை தாஜ் ஹோட்டல், ஹயாத் ஹோட்டல் ஆகியவற்றில் 800 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டனவாம். மும்பையில் இச்சனிக்கிழமை நடைபெற்ற அமெரிக்க-இந்தியா வர்த்தக் கவுன்சில் மற்றும் தொழில் அதிபர்கள் கூட்டத்தில் பேசிய ஒபாமா, தற்போது இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே 44 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. அதன்படி, போயிங் நிறுவனம், இந்தியாவுக்கு பல விமானங்களையும் ஜி.இ.நிறுவனம் நூற்றுக்கணக்கான மின்சார என்ஜின்களையும் இந்தியாவுக்கு விற்பனை செய்ய இருக்கிறன என்றார்.

இந்தத் தீபாவளிப் பண்டிகை நாளில் மட்டும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் 90 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகின. சென்னையில் மட்டும் ஒரே நாளில் பத்து கோடி ரூபாய் அளவுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக டாஸ்மாக் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கடந்த ஆண்டு இந்த விற்பனை 81 கோடி ரூபாய். ஆனால் இவ்வாண்டு அது அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில் வறுமை, அதனால் ஏற்படும் மனஉளைச்சல் உட்பட்ட சில காரணங்களால் உலகில் தினமும் சுமார் மூவாயிரம் பேர் தற்கொலை செய்கின்றனர். ஆயத்த ஆடை ஏற்றுமதி மூலம் ஆண்டுதோறும் 12 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் திருப்பூரில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 980 பேர் தற்கொலை செய்துள்ளனர். இவ்வாறு நாடுகளிலும் நகரங்களிலும் வறுமையினால் பசியினால் தினம் தினம் பலர் செத்துக் கொண்டிருக்க, பணக்காரர்களும் அரசியல்வாதிகளும் அரசுப் பணியாளர்களும் அடிக்கும் இலஞ்ச ஊழல்கள் கணக்கிலடங்காமல் போய்க் கொண்டிருக்கின்றன. ஒரு சராசரி இந்தியனால் குழப்பமின்றி எழுத்துக்கூட்டி கணக்கிடத் திணறும் ஒரு தொகையை வருவாய் இழப்பாக இந்தியத் தொலைத் தொடர்புத் துறை காட்டியிருக்கின்றது. அந்த இழப்பு ஒரு இலட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து அறுநூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய்கள் என்கிறது ஓர் ஊடகம்.

இந்தத் தீபாவளிக்குத் திரைக்கு வந்த திரைப்படங்களின் கதாநாயகர்களுக்கு எத்தனை பேர் பாலாபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தைச் செய்துள்ளார்கள். அபிமான ஹீரோக்களின் படங்களை முதல் நாள் பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்கவும் இரசிகர்கள் தயங்குவதில்லை. ஆனால் இந்தப் பணத்தை அன்றைய நாளில் பண்டிகையைக் கொண்டாட இயலாமல் இருந்தவர்களுக்குக் கொடுக்கும் எண்ணம் யாருக்காவது உதித்திருந்தால், அன்று யாராவது ஏழைகளின் பசியை போக்கியிருந்தால் அவர்களை ஹீரோக்கள் என்று பாராட்டலாம்தானே.

அன்பர்களே, உண்மையான ஹீரோக்கள் என்பவர்கள் யார்? நீங்களும் நானும் உண்மையான ஹீரோவாக ஆகமுடியாதா? மதுரை நாராயணன் சாத்தியமாக்கியதை நம்மாலும் சாத்தியமாக்க இயலாதா?. நாராயணன் போலத் தினமும் செய்யாவிட்டாலும் சில நாட்களிலாவது செய்ய முடியாதா அல்லது அவ்வாறு செய்வோருக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்யலாம் அல்லவா?. இதற்கு நம் இதயத்தின் ஓரத்தில் ஓரளவு கருணை பிறந்தாலே போதும். ஆம். “கருணை பொங்கும் உள்ளம், அது கடவுள் வாழும் இல்லம்”

கடந்த வாரத்தில் தமிழகத்தில் நடந்த உணவு உரிமைக்கான மாநில மாநாட்டில் பேசிய வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், “உணவுக்காக எப்போது வெளிநாட்டில் கையேந்துகிறோமோ அப்போது நாம் அடிமையாகி விடுவோம்” என்றார். வள்ளுவரும், “அற்றார் அழிபசி தீர்த்தல் அஃது ஒருவன், பெற்றான் பொருள்வைப் புழி” என்றார். அதாவது வறியோர் பசி தீர்த்தலே நம் செல்வத்தைச் சேர்த்து வைக்கும் இடமாகும். சர்க்கசில் செய்யும் சாகசத்தைவிட வாழ்க்கையில் இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. அத்தகைய மனிதரே உலகம் போற்ற வேண்டிய உண்மையான ஹீரோ.

முல்லைக்குத் தேர் தந்த பாரியும் மயிலுக்குப் போர்வை போர்த்திய பேகனும் உண்மையான ஹீரோக்கள். இரப்பவர்க்குக் கொடுப்பது ஈகை. ஆனால் இரவாமலே கொடுப்பது உயர்ந்த ஈகை. பாரியும் பேகனும் இரவாமல் கொடுத்தவர்கள். இரப்பவன் மானம் இழக்கிறான். இரவாமலே கொடுப்பவன் ஈகை மட்டும் செய்யவில்லை. ஏழையின் மானத்தையும் காக்கிறான். ஏழையின் மானம் காப்பவனை உண்மையான ஹீரோ என்று சொல்லலாம்.

ஒருநாள் ஒரு விறகுவெட்டி தலையில் விறகுச் சுமையுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் ஒரு துறவியை எதிர் கொண்டார். துறவி மேலிருந்த பக்தியால் அவருக்கு வழிவிட பாதையை விட்டு ஒதுங்கி நின்றார். அப்போது துறவி அவனிடம், விறகுக் கட்டை உடனே கீழே போடு என்றார். காலையிலிருந்து கஷ்டப்பட்டு வெட்டிச் சேர்த்த விறகுக் கட்டைக் கீழே போடச் சொல்கிறாரே என்று நினைத்துத் தயங்கினார். ஆயினும் துறவி சொன்னதால் அவன் அதனைக் கீழே போட்டார். உடனே கயிறு அறுந்து விறகுகள் சிதறின. அதிலிருந்து ஒரு கருநாகம் வெளியேறிச் சென்றது. விறகுவெட்டி ஆடிப்போனார். சாமி எனது உயிரைக் காப்பாற்றி விட்டீர்கள் என்று அவரது காலடிகளை வணங்கினார். அப்போது துறவி, நான் உன்னைக் காப்பாற்றவில்லை. நீ இன்று ஏதோ நற்செயல் செய்திருக்க வேண்டும். அதுதான் உன்னைக் காப்பாற்றியது என்றார். சிறிதுநேரம் சிந்தித்த விறகுவெட்டி, சாமி இன்று பகலில் விறகுவெட்டிக் களைத்துப் போய் மதியம் மரத்தடியில் அமர்ந்தேன். கடும் பசி. நான் கொண்டு வந்திருந்த சிறிது கேழ்வரகுக்கூழைக் குடிக்கப் போனேன். அப்போது ஒரு பயணி பசியாய் அங்கு வந்தார். ஐயா, நான் சாப்பிட்டு இரண்டு நாளாகிறது, ஏதாவது இருந்தால் கொடுங்கள் என்றார். நான் எனது கூழில் பாதியைக் கொடுத்தேன். இதுதான் இன்று நான் செய்தது என்றார். என்னை மரணத்திலிருந்து காப்பாற்றக்கூடிய அளவிற்கு இது அவ்வளவு பெரிய தர்மமா, வியப்பாக இருக்கின்றது என்று கேட்டார் விறகுவெட்டி. ஆம். நீ இன்று பாம்பு கடித்துச் செத்திருக்க வேண்டியவன். உனது தர்மம் உன்னைக் காத்துவிட்டது. நீ நன்றாக இருக்க வேண்டுமெனில் உன்னால் முடிந்த அளவு கருணையுடன் நடந்து கொள். தர்மம் செய் என்றார் துறவி.

என்ன அன்பர்களே, ஹீரோவாக முடிவு செய்துவிட்டீர்களா. வாடுவோரைத் தேற்றுவோம். பசித்திருப்போருக்கு உணவளிப்போம். ஆடையின்றி இருப்போரைப் போர்த்துவோம். ஆதரவற்றோருக்கு ஆறுதலாவோம். இந்த இரக்கச் செயல்கள் உங்களை உண்மையிலேயே ஹீரோக்களாக அடையாளம் காட்டும்.

ஆம். “கருணை பொங்கும் உள்ளம், அது கடவுள் வாழும் இல்லம்”








All the contents on this site are copyrighted ©.