2010-11-08 15:33:55

மேலும் இரு கிறிஸ்தவர்கள் பாக்தாத்தில் கொல்லப்பட்டுள்ளனர்


நவ.08,2010. இஞ்ஞாயிறன்று மேலும் இரு கிறிஸ்தவர்கள் பாக்தாத்தில் கொல்லப்பட்டனர். சென்ற ஞாயிறு 46 கிறிஸ்தவர்களின் உயிர்களைப் பலி வாங்கும் வண்ணம் பாக்தாத் சிரியரீதி கத்தோலிக்கப் பேராலயத்தில் நடத்தப்பட்டத் தாக்குதல் ஏற்படுத்தியுள்ள அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீள்வதற்கு முன், இஞ்ஞாயிறன்று மேலும் இரு கிறிஸ்தவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துள்ளனர்.

பாக்தாத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் கிறிஸ்தவர்களுடன் தங்கள் ஒன்றிணைப்பையும், ஆதரவையும் தெரிவித்துள்ளன. அக்டோபர் 31 ஞாயிறன்று கத்தோலிக்கப் பேராலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இறந்தவர்களுக்காக கடந்த வெள்ளியன்று பாக்தாத்தில் உள்ள அனைத்து இஸ்லாமியத் தொழுகைக் கூடங்களிலும் செபங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஈராக்கில் தற்போது பல மதத்தினரும் சேர்ந்து வாழும் அழகான இந்த சமுதாயம் தீவிரவாதத்தால் அழியக் கூடாதென்று பேராயர் Louis Sako உட்பட அனைத்து மதத் தலைவர்களும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதற்கிடையே, அக்டோபர் 31ம் தேதி படு கொலைகள் நடைபெற்ற பேராலயம் மீண்டும் இஞ்ஞாயிறன்று மக்கள் வழிபாட்டுக்குத் திறக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் இறந்த 46 பேரின் நினைவாக கோவிலின் நடுப்பகுதியில் சிலுவை வடிவில் மெழுகுதிரிகள் ஏற்றப்பட்டிருந்தன.








All the contents on this site are copyrighted ©.