2010-11-07 12:40:38

பார்செலோனாவில் திருத்தந்தை


நவ.07,2010. "சுதந்திரமின்றி, உண்மையின்றி எவரும் வாழ முடியாது, எனவே மனிதன் உண்மையை நேர்மையாகத் தேட வேண்டும். ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நடைபெறும் திருமணமும், உறுதியான குடும்ப வாழ்வும் மனித வாழ்வுக்கு இன்றியமையாதவை. மனிதன் கடவுளைப் புறம்தள்ளி வாழ முடியாது". இவை போன்ற திருத்தந்தை 16ம் பெனடிக்ட் விடுத்த அழைப்புகள் இந்நாட்களில் ஸ்பெயின் நாட்டு சந்தியாகோ தெ கொம்போஸ்தெல்லா மற்றும் பார்செலோனா நகரங்களில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இத்தாலிக்கு வெளியேயானத் திருத்தந்தையின் 18 வது வெளிநாட்டுத் திருப்பயணமான இந்த ஸ்பெயின் பயணத்தில் இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் மாலை 4.30 மணிக்கு சந்தியாகோ தெ கொம்போஸ்தெல்லா Obradoiro வளாகத்தில் ஜூபிலி ஆண்டு நிறைவுத் திருப்பலியைத் தொடங்கினார். இத்திருப்பலியில் முதலில் சந்தியாகோ தெ கொம்போஸ்தெல்லா உயர்மறைமாவட்டப் பேராயர் ஜூலியன் பாரியோ பாரியோ வரவேற்புரை வழங்கினார். பின்னர் திருப்பலி தொடர்ந்தது.

Asturie இளவரசர் ஃபெலிப்பே, அவரது மனைவி Letizia உட்பட ஏறத்தாழ இரண்டு இலட்சம் விசுவாசிகள் பங்கு கொண்ட இத்திருப்பலியில் திருத்தந்தையும் ஐரோப்பா அச்சமின்றி கடவுளுக்குத் தன்னைத் திறக்குமாறு அழைப்பு விடுத்து மறையுரை ஆற்றினார்.

ஏறத்தாழ இரண்டு மணிநேரம் நடைபெற்ற இத்திருப்பலிக்குப் பின்னர் அப்பேராலயத் திருப்பூட்டறையில் ஸ்பெயின் எதிர்க்கட்சித் தலைவர் மரியானோ ரஜாய் பிரேயையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்தார். பின்னர் சந்தியாகோ தெ கொம்போஸ்தெல்லா சர்வதேச விமான நிலையம் சென்று பார்செலோனா நகருக்குப் புறப்பட்டார். அங்கிருந்து 884 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள பார்செலோனாவைத் திருத்தந்தை அடைந்த போது இரவு 9 மணி. அப்போது இந்திய நேரம் இஞ்ஞாயிறு அதிகாலை 1 மணி 30 நிமிடங்கள்.

இயேசுவின் அப்போஸ்தலரான புனித யாகப்பரின் கல்லறை மீது அமைந்துள்ள சந்தியாகோ தெ கொம்போஸ்தெல்லா பேராலயத்தையும் அந்நகர் மக்களையும் அப்புனிதரின் பாதுகாவலில் வைத்து அந்நகருக்கானத் தனது ஒருநாள் திருப்பயணத்தை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 9 மணிக்கு பார்செலோனா பேராயர் இல்லத்திலிருந்து ஆறு கிலோ மீட்டரில் இருக்கின்ற Sagrada Familia திருக்குடும்ப ஆலயம் சென்றார் திருத்தந்தை. புதிய கோதிக் கலைநயத்தில் 1882ம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்ட இவ்வாலயம், 2026ம் ஆண்டு முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 18 கோபுரக் கூம்புகளையும் ஐந்து நடுக்கூடங்களையும் உள்ளடக்கிய இவ்வாலயம் கட்டி முடிக்கப்படும் போது உலகின் மிக உயரமான கோபுரமாகத் திகழும். இதனை தினமும் எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரையிலானப் பயணிகள் பார்வையிடுகின்றனர். இவ்வாலயப் பலிபீடத்தை அர்ச்சித்து அங்குத் திருப்பலியைத் தொடங்கு முன்னர் இதன் தற்போதைய கட்டடக் கலைஞர் ஹோர்தி போனெட் என்பவரையும் அவ்வாலய அருங்காட்சியகத்தில் ஸ்பெயின் அரசர் ஹூவான் கார்லோஸ், அரசி சோஃபியாவையும் சந்தித்தார் திருத்தந்தை. சுமார் ஒரு இலட்சம் பேரை உள்ளடக்கக்கூடிய இங்கு திருப்பலியைத் தொடங்குமுன்னர் அவ்வாலயச் சாவியை அதன் அதிபரிடம் கொடுத்தார். இவ்வாலயத் திருப்பலிபீடம் அர்ச்சிக்கப்பட்டவுடன் ஸ்பெயினின் பத்து ஆயர்கள் அதன் சுவர்களில் புனித எண்ணெய்யைத் தடவினர்.

இத்திருப்பலியில் ஸ்பெயின் அரசர், அரசி உட்பட பல்லாயிரக்கணக்கான விசுவாசிகள் கலந்து கொண்டனர். திருத்தந்தையும் மறையுரை நிகழ்த்தினார்.

இத் திருப்பலியை நிறைவு செய்து இந்தத் திருக்குடும்ப ஆலயத்தை மைனர் பசிலிக்கா எனவும் அறிவித்தார் திருத்தந்தை. நண்பகல் மூவேளை செப உரையும் நிகழ்த்தினார்.

இச்சனிக்கிழமை பிரேசிலில் மரியின் திருஇதய துறவு சபையை நிறுவிய மரிய பார்பரா முத்திப்பேறு பெற்ற நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது குறித்த மகிவ்ச்சியைத் தெரிவித்தார். இந்த ஆலயத்தை மைனர் பசிலிக்கா என அறிவித்ததைக் குறிப்பிட்டு இதன் முதன்மைக் கலைஞரான அந்தோணியோ கவ்தி இப்பசிலிக்கா மூலம் நற்செய்தியை ஒவ்வொருவருக்கும் எடுத்துச் செல்ல எண்ணம் கொண்டிருந்ததையும் குறிப்பிட்டார்.

இஞ்ஞாயிறு மாலை “Nen Deu” சிறார் இல்லத்திற்குச் செல்லுதல் இப்பயணத்தின் இறுதி நிகழ்ச்சியாகும். இத்துடன் திருமணம் மற்றும் மரபுரீதியானக் குடும்ப வாழ்வுக்கு அழைப்பு விடுத்த திருத்தந்தையின் ஸ்பெயின் நாட்டு சந்தியாகோ தெ கொம்போஸ்தெல்லா மற்றும் பார்செலோனா நகரங்களுக்கான இரண்டு நாள் திருப்பயணம் மற்றும் அவரின் 18வது வெளிநாட்டுத் திருப்பயணம் நிறைவுக்கு வருகின்றது.








All the contents on this site are copyrighted ©.