2010-11-07 12:44:44

திருத்தந்தை - கடவுள் நம் இதயங்களில் வாழ்வதற்கு அவரை அனுமதிக்கும் போது நாம் எதற்கும் வருந்தமாட்டோம்


நவ.07,2010. “இன்று கடவுளாகிய ஆண்டவரின் புனித நாள். எனவே நீங்கள் அழுது புலம்ப வேண்டாம். ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை”. இவ்விவிலிய வார்த்தைகளுடன் தனது மறையுரையைத் தொடங்கிய திருத்தந்தை, இந்தக் கலைநயமிக்க ஆலயத்தின் முக்கிய கலைஞராகிய Antoni Gaudi வின் ஆழமான கிறிஸ்தவ வாழ்வு பற்றியும் புனித வளன் மீது இவருக்கிருந்த அலாதி பக்தி பற்றியும் முதலில் விளக்கினார். அவர் மேலும் தொடர்ந்தார்.

RealAudioMP3 நாம் இந்த புனித இடத்தைக் கடவுளுக்கு அர்ப்பணித்துள்ளோம். இந்தக் கடவுள் இயேசு கிறிஸ்துவில் தம்மை வெளிப்படுத்தி அவரில் தம்மையே தந்துள்ளார். திருச்சபை தன்னிலே ஒன்றுமில்லை. ஆனால் அது அவரது கட்டளையை நிறைவேற்ற, கிறிஸ்துவின் அடையாளமாகவும் கருவியாகவும் செயல்பட அழைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவே ஒரே திருச்சபையின் அடிக்கல். கடவுள், வன்முறையின் கடவுள் அல்ல, மாறாக அமைதியின் கடவுள் என்றும், அவர் தடைகளின் கடவுள் அல்ல, மாறாக சுதந்திரத்தின் கடவுள் என்றும், பிணக்குகளின் கடவுள் அல்ல, மாறாக நல்லிணக்கத்தின் கடவுள் என்றும் ஒவ்வொருவருக்கும் காட்டுவது திருச்சபையின் உறுப்பினர்களாகிய நமது வேலையாகும். கடவுள் எதுவுமே தனது வாழ்வில் சொல்வதற்கில்லை என்பது போலவும், அவர் இல்லாமல் தனது வாழ்வைக் கட்ட முடியும் எனவும் மனிதன் சொல்லும் இக்காலத்தில் Sagrada Familia ஆலய அர்ச்சிப்பு மாபெரும் முக்கிய நிகழ்வாக அமைகின்றது. நாம் இந்த ஆலயப் பீடத்தைத் திருநிலைப்படுத்தும் போது, “கடவுள் மனிதனின் நண்பர். மனிதர் எல்லாரும் அவரின் நண்பர்களாக மாற நாம் அவர்களை அழைக்கிறோம்” என்பதை உலகுக்கு அறிவிக்கிறோம். கடவுள் நம் இதயங்களில் வாழ்வதற்கு அவரை அனுமதிக்கும் போது நாம் எதற்கும் வருந்தமாட்டோம். அவரது வாழ்வையே பகிர்ந்து கொள்ளும் ஆனந்தத்தை அனுபவிப்போம். RealAudioMP3 இந்த ஆலயம், புனித வளன் நண்பர்கள் கழகத்தின் முயற்சியால் கட்டத் தொடங்கபட்டது. இதனைத் தொடங்கியவர்கள், இயேசு மரி வளன் ஆகியோரைக் கொண்ட திருக்குடும்பம் வாழ்ந்த வாழ்வை நம்முன் வைக்கின்றனர். தொழிற்நுட்பம், சமூக மற்றும் கலாச்சாரத் துறைகளில் இன்று வாழ்வு பெரிதும் மாறிவிட்டது. ஆனால் இந்த வளர்ச்சியில் நாம் திருப்தி அடைய முடியாது. இவற்றோடு பிளவுபடாத குடும்பங்கள், ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே நடக்கும் திருமணம், மனித வாழ்வு பிறப்பு முதல் அது இயல்பான மரணம் அடையும் வரைக் காக்கப்படுதல் என அறநெறி வாழ்விலும் நாம் முன்னேற்றம் காண வேண்டியிருக்கிறது. எனவேதான் திருச்சபையும், மனித வாழ்வு எந்த வடிவில் புறக்கணிக்கப்பட்டாலும் அதனை எதிர்க்கின்றது.

அன்புச் சகோதர சகோதரிகளே, திருவருளும் பிறரன்பும் பார்செலோனா மக்கள் மீது பொழியப்பட செபிக்கிறேன். ஏழைகள் இறைவனின் இரக்கத்தையும் ஒடுக்கப்படுவோர் உண்மையான விடுதலையையும் எல்லாரும் மனித மாண்பைப் பெறவும் திருச்சபை இந்நேரத்தில் செபிக்கின்றது.

இவ்வாறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் சக்ராதா ஃபமிலியா மைனர் பசிலிக்காவில் மறையுறையாற்றினார்.








All the contents on this site are copyrighted ©.