2010-11-07 14:18:53

கட்டி முடிக்கப்படாத சாக்ரதா ஃபமிலியா மைனர் பசிலிக்கா


நவ.07,2010. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இஞ்ஞாயிறன்று ஸ்பெயின் நாட்டு பார்செலோனா Sagrada Familia திருக்குடும்ப ஆலயத்தை அர்ச்சித்தார். 1882ம் ஆண்டு இவ்வாலயத்தை கட்டும் பணிக்குப் பொறுப்பேற்றவர் பிரான்ஸிஸ் தெல் வில்லார் எனும் கலைஞராவார். ஆனால் அவர் அப்பணியிலிருந்து விலகியதால் 1883ம் ஆண்டு இப்பொறுப்பை ஏற்றவர் அந்தோணியோ கவ்தியோ என்ற கட்டட கலைஞராவார். “எனது ஆள் அவசரப்படவில்லை” என்று கூறி இவர் இக்கட்டுமானப் பணியைச் செய்து வந்தார். கவ்தி 1926ம் ஆண்டு மரணமடையவே அவரது பணியை Domènech Sugranyes என்பவர் தொடர்ந்தார். ஆயினும் 1936ம் ஆண்டில் ஸ்பெயினில் உள்நாட்டுச் சண்டை தொடங்கவே இப்பணி நிறுத்தி வைக்கப்பட்டது. கட்டி முடிக்கப்படாத இவ்வாலயம், கவ்தியின் திட்டங்கள், பணியிடம் ஆகியவற்றின் பல ஸ்பானிய கட்டாலன் கிளர்ச்சியாளர்களால் அழிக்கப்பட்டன. 1940ம் ஆண்டு முதல் பிரான்சிஸ் குயின்தானா, இசித்ரு போவாடா, லாயிஸ் போனெ இ காரி, பிரான்சிஸ் கார்டோனெர் ஆகிய கலைஞர்களால் இக்கட்டுமானப்பணி தொடரப்பட்டது. இப்பணிகள் 2026ம் ஆண்டு முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாலயம், 18 கூம்புக் கோபுரங்களையும் ஐந்து நடுக்கூடங்களையும் உள்ளடக்கிய இவ்வாலயம் கட்டி முடிக்கப்படும் போது இது உலகின் மிக உயரமான ஆலயமாகத் திகழும் எனச் சொல்லப்படுகிறது. இதன் மத்திய கோபுரம் 170 மீட்டர் உயரம் ஆகும். புனித கன்னிமரி உலகுக்கு வழங்கிய மனுஉரு எடுத்த கிறிஸ்து வழியாக மனிதனுக்குக் கிடைத்த மீட்பின் வரலாற்றின் வெளிப்பாடாக இது கட்டப்படுகின்றது. மரங்கள் போன்ற தூண்கள் இவ்வாலய மேற்க்கூரையைத் தாங்கி நிற்கின்றன. இவ்வாலயத்தைத் தினமும் எட்டாயிரம் முதல் பத்தாயிரம் வரையிலானப் பயணிகள் பார்வையிடுகின்றனர். 2004ம் ஆண்டில் மட்டும் 22 இலட்சத்து 60 ஆயிரம் பேர் தரிசித்துள்ளனர். இவ்வாலயத் திருப்பலிபீடத்தை இஞ்ஞாயிறன்று (நவம்பர் 07,2010) அர்ச்சித்து அவ்வாலயத்தை மைனர் பசிலிக்கா என அறிவித்தார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.