2010-11-06 16:23:45

சந்தியாகோ தெ கொம்போஸ்தெல்லா பேராலயத்தில் திருத்தந்தை


நவ.06,2010. ஓர் இடத்திற்குத் திருப்பயணமாகச் செல்வது அவ்விடத்தின் இயல்புகள், கலைகள் அல்லது அதன் வரலாற்று நயங்களை இரசிப்பதற்காக மட்டும் அல்ல, மாறாக கடவுள் தம்மை வெளிப்படுத்தியுள்ள அவரைச் சந்திப்பதற்காகவும், குறிப்பிட்ட மகிமையோடு அவர் தம் அருளைப் பொழிந்துள்ள, நம்பிக்கையுள்ளோருக்கு மனமாற்றம், தூய்மை போன்ற கனிகளை உற்பத்தி செய்கின்ற இடத்திற்குச் செல்வதாகவும் அது இருக்கின்றது. நம் ஆண்டவரின் பாடுகள், மரணம் மற்றும் உயிர்ப்போடு தொடர்புடைய இடங்களைப் பார்ப்பதற்குக் கிறிஸ்தவர்கள் புனித பூமிக்குச் செல்கின்றனர். பேதுரு, பவுல் மறைசாட்சிகளாக இறந்த நகரான உரோமைக்குச் செல்கின்றனர். அதுபோல் கொம்போஸ்தெல்லாவும் புனித யாகப்பரை நினைவுபடுத்துகின்றது. நானும் இந்த கொம்போஸ்தெல்லா ஜூபிலி ஆண்டில், “புனித யாகப்பரின் இல்லத்திற்குத்” திருப்பயணியாக வந்துள்ளேன். இவ்வில்லம் திருநிலைப்படுத்தப்பட்டதன் 800ம் ஆண்டைக் கொண்டாடத் தயாரிப்புகள் இடம் பெற்று வரும் இவ்வேளையில் நான் உங்கள் விசுவாசத்தை உறுதிப்படுத்தி உங்கள் நம்பிக்கையைத் தட்டி எழுப்பி உங்கள் ஏக்கங்களை இந்த அப்போஸ்தலரிடம் அர்ப்பணிக்க வந்துள்ளேன். விசுவாசத்தின் வழியாக நாம் மூவொரு கடவுளின் அன்பின் பேருண்மையில் நுழைகிறோம். உண்மையும் சுதந்திரமும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. திருச்சபை இவற்றிற்கானப் பணியில் நின்று, மனிதன் மற்றும் அவனின் மாண்புக்காக அயராது உழைக்க விரும்புகிறது. நீங்கள் கடவுளின் அன்புப் பிள்ளைகள். குருத்துவ மற்றும் துறவற வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளப் பல இளையோர் முன்வருமாறு செபியுங்கள். ஒருவர் தனது வாழ்வு முழுவதையும் நற்செய்தியின் புதினத்தை அறிவிப்பதற்கு அர்ப்பணிப்பது என்றென்றும் தகுதியானதாகும். ஸ்பெயின் கத்தோலிக்கர் தங்களது தாராளப் பண்பால் பல பிறரன்பு மற்றும் மனித முன்னேற்ற நிறுவனங்களுக்கு உதவி வருவதை மனதாரப் பாராட்டுகிறேன். அப்பணியைத் தொடருமாறும் கேட்கிறேன்.







All the contents on this site are copyrighted ©.