2010-11-06 16:22:04

கொம்போஸ்தெல்லா விமானநிலையத்தில் திருத்தந்தை – சுதந்திரம், உண்மையின்றி மனிதன் வாழ முடியாது


நவ.06,2010. இங்கு கூடியிருப்பவர்கள் மற்றும் பல்வேறு ஊடகங்கள் மூலம் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் எல்லாருக்கும் எனது வாழ்த்துக்கள். சுதந்திரமின்றி, உண்மையின்றி மனிதன் வாழ முடியாது. உண்மையை நேர்மையுடன் தேடுவதே உறுதியான சுதந்திரத்திற்கான வரைமுறை. மனிதன் தன்னிலே ஒரு பயணி, அதிலும் அவன் உண்மையைத் தேடும் பயணி. திருச்சபையும் மனிதனின் இந்த ஆழமானத் தேடல் பயணத்தில் மனித சமுதாயத்தோடு உடன் செல்கின்றது. இதுவே திருச்சபையின் பணி. நானும் கொம்போஸ்தெல்லாவின் இந்த ஜூபிலி ஆண்டில் திருப்பயணியாக இங்கு வந்துள்ளேன். தனது பயணங்களில் ஸ்பெயினுக்கும் செல்ல வேண்டுமென்று ஆவல் கொண்டிருந்த திருத்தூதர் பவுலை வழிநடத்திய கிறிஸ்துவின் அதே அன்பை நானும் என் இதயத்தில் கொண்டு வந்துள்ளேன். புனித யாகப்பரின் சாட்சிய விசுவாசத்தால் தாங்களும் மாற்றம் அடையும் ஆவலில் அப்புனிதரின் காலடிகளின் முன்னர் மண்டியிட்டுச் செபிப்பதற்காக உலகின் எல்லா இடங்களிலிருந்தும் நூற்றாண்டுகளாக இவ்விடத்திற்குத் திருப்பயணம் மேற்கொள்ளும் எல்லாரோடும் நானும் இணைய விரும்புகிறேன். இவ்வழியில் ஸ்பெயினும் ஐரோப்பாவும் அழிக்க முடியாத ஓர் ஆன்மீகச் சிறப்புக்கூற்றை வளர்த்துள்ளன. நானும் நற்சயெதியின் அறிவிப்பாளராக, மக்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்தப் பார்செலோனாவுக்கும் செல்லவிருக்கிறேன். இந்த விசுவாசமே அந்தோணி கௌதி என்ற கலைஞரை Sagrada Familia என்ற திருக்குடும்ப ஆலயத்தை வடிவமைக்கத் தூண்டியது. இந்த ஆலயத்தையும் அர்ச்சிக்கவுள்ளேன். லொயோலா இஞ்ஞாசியார், இயேசுவின் தெரஸ், சிலுவை அருளப்பர், பிரான்சிஸ் சவேரியார் உட்பட மாபெரும் விண்மீன் புனிதர் கூட்டங்களைக் கொண்ட இந்த ஸ்பெயின் நாட்டிற்கு மீண்டும் வந்துள்ளதில் மகிழ்ச்சி அடைகிறேன். இருபதாம் நூற்றாண்டிலும் புதிய நிறுவனங்கள் எழுந்துள்ளன. வளமையான மனித மற்றும் ஆன்மீக விழுமியங்களைக் கொண்ட ஸ்பெயின் நாடு இன்னல்கள் மத்தியிலும் இதே பண்புகளில் வளரவும் அவற்றை அனைத்துலக சமுதாயத்துக்கு வழங்கவும் முயற்சிக்கிறது. இம்முயற்சிகள் வெற்றியடையட்டும். ஸ்பெயினும் ஐரோப்பாவும் மக்களின் பொருளாதாரத் தேவைகளை மட்டுமல்லாமல் நன்னெறி, சமூக, ஆன்மீக மற்றும் சமயத் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும். அதுவே ஒருங்கிணைந்த மனித நலனுக்குப் பயன் தரும். உங்கள் எல்லாருக்கும் மிக்க நன்றி








All the contents on this site are copyrighted ©.