2010-11-05 15:17:06

இறையழைத்தலை ஊக்குவிக்குமாறு பிரேசில் ஆயர்களுக்குத் திருத்தந்தை வேண்டுகோள்


நவ.05,2010. அர்ப்பணிக்கப்பட்ட இருபால் துறவறக் குழுக்கள் திருச்சபையை வளப்படுத்தி வரும்வேளை, இத்துறவு வாழ்வுக்கான அழைத்தல்களை ஊக்குவிப்பதில் தலத்திருச்சபை கவனம் செலுத்துமாறு பிரேசில் ஆயர்களிடம் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை பாப்பிறையைச் சந்திக்கும் "ad Limina Apostolorum" என்ற சந்திப்பையொட்டி பிரேசில் நாட்டுத் தென்பகுதி ஆயர்களில் 25 பேரை திருப்பீடத்தில் இவ்வெள்ளிக்கிழமை சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, திருச்சபையின் வாழ்வில் துறவிகளின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார்.

இக்காலத்தில் பல துறவற சபைகளில் உறுப்பினர்கள் குறைந்து வருகின்றனர், அதேசமயம் வயதானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்தத் துறவற சபைகளைப் புதுப்பிப்பதற்கு, அவ்வாழ்வுக்கானப் பயிற்சியில் அக்கறை காட்டுவது இன்றியமையாதது என்றும் கூறினார்.

துறவற வாழ்வுக்கானப் பயிற்சி என்பது வெறும் அறிவு சார்ந்த தயாரிப்பாக இல்லாமல் அர்ப்பணிக்கப்பட்ட இந்த வாழ்வை இறையியல் கோணத்தில் சிந்திப்பதற்கும் கற்றுக் கொடுப்பதாக அமைய வேண்டும் என்று திருத்தந்தை பிரேசில் ஆயர்களிடம் வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.