2010-11-04 15:45:32

லாட்டரி சீட்டுக்களுடன் இறையன்னை மரியாவைத் தொடர்பு படுத்தும் பழக்கத்தைக் கண்டித்துள்ளார் பிலிப்பின்ஸ் ஆயர்


நவ.04,2010. பிலிப்பின்ஸ் நாட்டில் லாட்டரி சீட்டுக்களுடன் இறையன்னை மரியாவைத் தொடர்பு படுத்தும் பழக்கத்தைக் கண்டித்துள்ளார் அந்நாட்டின் ஆயர் ஒருவர்.
லாட்டரி சீட்டுக்கள், அதிர்ஷ்டம் இவைகள் ஏற்கனவே மூட நம்பிக்கையை வளர்க்கும் போக்குகள் என்றும் இவற்றுடன் இறையன்னையையோ இன்னும் பிற புனிதர்களையோ தொடர்பு படுத்துவது தவறு என்று பிலிப்பின்ஸ் கலூக்கன் மறைமாவட்டத்தின் ஆயர் Deogracias Iñiguez கூறினார்.
இத்திங்களன்று வெளியான லாட்டரி அறிவிப்பில் பெரும் தொகை ஒன்று அறிவிக்கப்பட்டிருந்ததால், லாட்டரி சீட்டுக்களை வாங்குவதும், அச்சீட்டுக்களை மரியாவின் பாதத்திலும், புனிதர்களின் பாதத்திலும் வைத்து வேண்டுவதும் அதிகமாயிருந்ததைக் கண்ணுற்ற ஆயர் Deogracias Iñiguez இப்புதனன்று இவ்வாறு கூறினார்.
பிலிப்பின்ஸ் நாட்டில் லாட்டரி சீட்டு, மற்றும் பல அதிர்ஷ்ட விளையாட்டுக்கள் அதிகம் பரவி வருவதாகவும், இந்த விளையாட்டுக்களில் பெருகி வரும் தவறான வழிகளைக் கடந்த செப்டம்பர் மாதம் சுட்டிக்காட்டிய வேறொரு ஆயருக்குக் கொலை மிரட்டல்கள் வந்ததாகவும் செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.லாட்டரி போன்ற விளையாட்டுக்களால் ஏழைகளின் வாழ்வு அதிகம் பாதிக்கப்படுவதால், பிலிப்பின்ஸ் தலத் திருச்சபை இந்த விளையாட்டுக்களை விமர்சித்து வருகிறது.







All the contents on this site are copyrighted ©.