2010-11-04 15:46:08

பாக்தாத் நகரில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ஈராக்கின் கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் குழப்பம்


நவ.04,2010. கடந்த ஞாயிறன்று ஈராக்கின் பாக்தாத் நகரில் திருப்பலி நேரத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ஈராக்கின் கிறிஸ்தவர்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர் என்று அந்நகரில் உள்ள துறவறச் சபைத் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.
ஈராக்கின் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து அந்நாட்டில் தங்கி தங்கள் விசுவாசத்திற்குச் சான்று பகரும் வாழ்க்கை நடத்துவதா அல்லது தங்களையும் தங்கள் குடும்பங்களையும் காத்துக் கொள்ள பிற நாடுகளுக்குக் குடிபெயர்ந்து செல்வதா என்ற குழப்பத்தில் உள்ளனர் என்று அப்பகுதியின் உலக மீட்பர் துறவு சபையின் தலைவர் அருள்தந்தை Vincent Van Vossel கூறினார்.
திருப்பீடத்தின் உர்பான் பல்கலைக் கழகத்துடன் தொடபுடைய பாபேல் கல்லூரியில் கடந்த 40 ஆண்டுகளாக ஆசிரியர் பணி புரிந்து வரும் அருள்தந்தை Vossel, கடந்த ஞாயிறன்று பாக்தாத்தில் நடந்த சம்பவம் கிறிஸ்தவர்களைப் பெரிதும் அச்சத்திலும், குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளதேனவும், இறைவனின் ஆலயம் ஒரு கல்லறையாக மாறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதெனவும் கூறினார்.இச்செவ்வாயன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பல இஸ்லாமியத் தலைவர்கள், கிறிஸ்தவர்களைக் காப்பதற்கு அரசு இன்னும் மிகுந்த அக்கறையுடனும், தீவிரமாகவும் செயல்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர் என்று அருள்தந்தை Vossel கூறினார்.







All the contents on this site are copyrighted ©.