2010-11-03 15:27:02

நவம்பர் 04 – நாளும் ஒரு நல்லெண்ணம்


உலகம் முழுவதும் பசியில் வாழும் மக்களின் எண்ணிக்கை 100 கோடிக்கு மேல் இருக்குமென்று ஐக்கிய நாடுகள் சபையின் வேளாண் மேம்பாட்டுக்கான சர்வதேச நிதி அமைப்பான IFAD கூறுகிறது. மேலும், இதில் மூன்றில் ஒரு பகுதியினர் அதாவது 33 கோடிபேர் இந்தியாவில் வாழ்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியா உலகப்பசி அட்டவணையில் 94வது இடத்தில் உள்ளதெனவும், 5 வயதிற்குக் குறைவான சிறார்களில் 43 விழுக்காட்டினர் எடைக்குறைவோடு உள்ளனர் எனவும், இது உலகிலேயே மிக அதிகமான எண்ணிக்கை எனவும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் பசி அட்டவணையில் 94வது இடத்தில் இடம் பெறக்கூடிய அளவிற்கு இந்தியாவில் உணவு உற்பத்தியில் பற்றாக்குறை நிலவுகின்றதா என்றால் இல்லையென்பது தான் உண்மை. இந்தியாவின் மொத்த உணவு உற்பத்தி 2009-10ஆம் ஆண்டில் 21கோடியே 82 இலட்சம் மில்லியன் டன். இது 2008-09ஆம் ஆண்டில் 23 கோடியே 74 இலட்சத்து 70 ஆயிரம் டன்னாக இருந்துள்ளது. அதேபோல் தென் மாநில மக்களின் பிரதான உணவாகிய அரிசி 2008-09ல் 9 கோடியே 91 இலட்சத்து 80 ஆயிரம் டன்னாக இருந்தது 2010-11ல் 10கோடி டன்னாக உயருமெனவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் வறுமையும் பசியும் தொடர்கதையாய் இருப்பதற்கு மூலக்காரணம் திட்டமிட்ட பகிர்வு இல்லாமை, பகிர்வில் குளறுபடிகள் மற்றும் பிரச்சனையின் வீரியத்தை புரிந்து கொண்டு அதைத் தீர்த்திட முன்வராததேயாகும். உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்த இந்தியாவில் 33 கோடிப் பேர் பசியால் வாடும் நிலை என்பது ஏற்கக்கூடியதா என நாம் சிந்திக்க வேண்டும்.








All the contents on this site are copyrighted ©.