2010-11-03 15:23:55

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


நவ 03, 2010. 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த கர்த்தூசியன் துறவு இல்லத்தலைவியும் தியான யோகியும் ஆன Oingt ன் Marguerite குறித்து இன்றைய நம் புதன் பொது மறைபோதகத்தில் நோக்குவோம் என உரையைத் துவக்கினார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.

தென் ஃப்ரான்சின் Provençal பகுதி ஃப்ரெஞ்ச் மொழியில் எழுதப்பட்டவைகளின் துவக்க கால ஆதாரமாக இருக்கும் Margueriteன் எழுத்துக்கள், புனித புருனோவின் 'நற்செய்தி ஆன்மீகத்தால்' தூண்டப்பட்டவைகளாக இருந்தன. அந்த எழுத்துக்கள் அவரின் மேலான உள்ளுணர்வுகளையும், இறைவன் மீதான அவரின் ஆவலையும் வெளிப்படுத்துபவைகளாக இருந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக, மீட்பிற்கான கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளைத் தியானிப்பதன் வழி அவரில் முற்றிலுமாக உருப்பெறுவதற்கான சிறந்த வழியே நம் வாழ்வு என நோக்கினார் Marguerite. இறைவனின் வாழ்வு, வார்த்தைகள் மற்றும் நடவடிக்கைகளை அவ்விறைவன் நமக்குத் திறந்து காண்பிக்கும் ஒரு புத்தகமாகவே எண்ணினார் இவர். தூய மூவொரு கடவுள் குறித்த ஆழ்ந்த தியானத்தில் இப்புத்தகத்தை, அதாவது இறைவனின் வாழ்வு, வார்த்தைகள் மற்றும் நடவடிக்கைகளை நமக்குள்ளிருந்தே நாம் வாசிக்கும் நாள் வரும் வரை, அப்புத்தகம் படிக்கப்பட்டு நம் இதயங்களிலும் வாழ்விலும் பதிக்கப்படவேண்டும் என விரும்பினார் Marguerite. குடும்ப வாழ்வு குறித்த உருவகங்களால் நிரம்பியுள்ள இவரின் எழுத்துக்கள், இறைவனின் இதமான அன்பை நம்மிடையே பரவ விடுவதோடு, நம்மை இறைவன் அருகே அழைத்துச் செல்வதாகவும், நம்முடைய பாச உணர்வுகளைப் புனிதப்படுத்தும் இறை அருளுக்கு நன்றிச் சொல்வதாகவும் உள்ளன. இறைவனின் முடிவற்ற அன்பெனும் மறையுண்மை குறித்துத் தினமும் தியானிக்க அழைப்பு விடுப்பதாக Oingtன் Margueriteன் வாழ்வும் எழுத்துக்களும் உள்ளன. அனைத்திற்கும் மேலாக, இயேசுவின் சிலுவைத் துன்பங்களில் வெளிப்படுத்தப்பட்ட அந்த முடிவற்ற அன்பில் சக்தியையும் மகிழ்வையும் கண்டு கொண்டு, நம் வாழ்வை இறைப்பணிக்கும் நம் சகோதர சகோதரிகளின் பணிக்கும் என முன்வைக்க வேண்டும் என அழைப்பு விடுப்பதாகவும் Margueriteன் வாழ்வும் எழுத்துக்களும் உள்ளன.

இவ்வாறு தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.