2010-11-02 15:54:45

விவிலியத் தேடல்


RealAudioMP3
"தம் பெயர்க்கேற்ப எனை நீதி வழி நடத்திடுவார்."
திருப்பாடல் 23ன் மூன்றாம் வரிகளின் பிற்பகுதியில் நம் சிந்தனைகளைச் சென்ற விவிலியத் தேடலில் ஆரம்பித்தோம். வாழ்வில் நாம் மேற்கொள்ளும் நேரிய வழி, நீதி வழி ஆகியவை ஜியோமிதி அல்லது வடிவக் கணிதத்தில் நாம் படிக்கும் நேர்கோடு அல்ல. வளைந்து நெளிந்து செல்லும் வழிகள் இவை, பல சமயங்களில் சிக்கலான, நமது பொறுமையைச் சோதிக்கும் வழிகள் இவை என்பவைகளைச் சென்ற விவிலியத் தேடலில் சிந்தித்தோம். இந்தச் சிக்கலான வாழ்வுப் பாதையில் இறைவன் நம்மை எவ்விதம் வழி நடத்துகிறார் என்பதை இன்று சிந்திப்போம்.

நாம் அனைவரும் குழந்தைப் பருவத்தைக் கடந்து வந்தவர்கள். இப்பருவத்தில் நாம் தவழ்ந்து, நடந்து வந்த அனுபவங்களைச் சிறிது அசைபோடுவோம்.
பிறந்ததும், ஒவ்வொரு குழந்தையும் வானத்தைப் பார்த்தபடியே படுத்திருக்கும். சில மாதங்களில் குழந்தை குப்புறப் படுக்கும். அப்போதுதான் தான் பிறந்துள்ள இந்தப் பூமியை அக்குழந்தை பார்க்கும். இன்னும் சில மாதங்களில் இரு கைகளையும், கால்களையும் தரையில் ஊன்றி, தன் படுக்கையை விட்டு, தொட்டிலை விட்டு வெளியேறி, ஒரு சிறு உலகைச் சுற்றி வரும். பின்னர், தட்டுத் தடுமாறி நிற்கும், முதல் அடிகளை எடுத்து வைக்கும்.
குழந்தைகள் தமது சொந்த முயற்சியில் எடுத்து வைக்கும் முதல் அடிகள் எல்லாக் குடும்பங்களிலும் பெருமிதமாகக் கொண்டாடப்படும் நாள். குழந்தை எழுந்து நடக்கும் போது, தந்தையோ, தாயோ அக்குழந்தைக்குப் பின்புறமாய் இருந்து குழந்தை நடப்பதை உற்சாகப்படுத்துவர். அல்லது, முன்னே நின்று கொண்டு குழந்தையைத் தங்களிடம் வரச் சொல்வார்கள். அந்த முதல் நாட்களில் குழந்தை கீழே விழ வாய்ப்புக்கள் அதிகம். அந்த வாய்ப்புக்களைக் குழந்தைக்கு அளிக்கப் பயந்து, குழந்தையைத் தரையிலேயே விடாமல் தூக்கிச் சுமக்கும் பெற்றோர் குழந்தையின் வளர்ச்சியைக் கெடுத்து விடுவார்கள். விழுந்து, எழுந்து பழகினால்தான் குழந்தை தனியே, சுதந்திரமாக நடை பயில முடியும். இந்த நடை பயிற்சிகள் எல்லாமே குழந்தைக்கு மிகவும் பழக்கப்பட்டச் சூழ்நிலையில், வீட்டுக்குள் நடக்கும் பயிற்சிகள்.
இதற்கு அடுத்தபடியாக, அக்குழந்தை வெளி உலகில் அடியெடுத்து வைக்கும்போது, தந்தையின் அல்லது தாயின் கைகளைப் பற்றியவாறு குழந்தை நடக்கப் பழகும். தந்தை அல்லது தாயின் ஒரு விரல் போதும் அக்குழந்தை நடப்பதற்கு. இன்னும் சில மாதங்களில் அந்த விரலும் தேவைப்படாது. குழந்தைகள் சிறுவர்களாய் அல்லது சிறுமிகளாய் இந்த உலகை வலம் வரத் துவங்குவார்கள். இவை அனைத்தும் உடல் அளவில் குழந்தை பெறும் வழி நடத்துதல்.

நம் ஒவ்வொருவருக்கும் தேவையான வழி நடத்துதல் இன்னும் பிற வழிகளிலும் நமக்குக் கிடைத்துள்ளது. பள்ளிப் படிப்பு, கல்லூரி படிப்பு, வேலை, என்று வாழ்வின் பல்வேறு நிலைகளில், வாழ்வின் பல முக்கிய முடிவுகளில் தாய், தந்தை, ஆசிரியர், உற்றார், நண்பர் என்று பலர் நமக்கு வழி காட்டியதை நினைத்து பார்க்கலாம். பல குடும்பங்களில் இந்த முக்கியமான நேரங்களில் இறைவனின் வழி நடத்துதலையும் வேண்டுகிறோம். கடவுள் எவ்வகையில் வழி நடத்துவார்? "தம் பெயர்க்கேற்ப எனை நீதி வழி நடத்திடுவார்."
வாழ்வில் இறைவனின் வழிநடத்துதலைத் தேடுவோர் பலருக்கு திருப்பாடல் 23ன் இவ்வரிகள் அறிவுரையாக, செபமாகத் தரப்படும். இதேபோல், நீதிமொழிகள் 3: 6ல் சொல்லப்பட்டுள்ள வரிகளும் பயன்படுத்தப்படும்.
"நீ எதைச் செய்தாலும், ஆண்டவரை மனதில் வைத்துச் செய்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செம்மையாக்குவார்."
செம்மையாக்கப்பட்ட, சீராக்கப்பட்ட, நேராக்கப்பட்டப் பாதைகளைக் குறித்து இறை வாக்கினர் எசாயா கூறும் வார்த்தைகள் இவை:
எசாயா 40: 3-4
குரலொலி ஒன்று முழங்குகின்றது: பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்: பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்: மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்: கோணலானது நேராக்கப்படும். கரடு முரடானவை சமதளமாக்கப்படும். 
ஆங்கிலத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு கூற்று உண்டு: "God writes straight with crooked lines." அதாவது, கோணல் மாணலான வரிகளிலும் கடவுள் நேராக எழுதுவார்.
பாதைகள் நேராக்கப்படும், கரடுமுரடானவைகள் சமமாக்கப்படும் என்ற வார்த்தைகளைக் கேட்கும் போது, மனதில் ஓர் எண்ணம் பிறக்கிறது. இறைவன் வந்துவிட்டால், எல்லாம் எளிதாகிவிடும் என்ற எண்ணம்.
பாதைகளை நேராக்க, சீராக்க, சமமாக்க, கோணல் வரிகளிலும் நேராக எழுத கடவுளுக்கு வலிமையுண்டு. சந்தேகமில்லை. ஆனால், இந்த வல்லமைகளைக் கொண்டு அவர் நமது வாழ்வுப் பாதையை நீண்டதொரு நேர்கோடாக மாற்றி, வாழ்வில் எப்போதும் நம்மைத் தூக்கிக் கொண்டே நடந்தால், நாம் நடக்கும் திறனை இழந்துவிடுவோம். இறைவனின் வழி நடத்துதல் இவ்விதம் இருக்காது.

நேர்கோடான பாதைகள் ஆபத்தானவை என்பதையும் நாம் அறிய வேண்டும். சாலைகளில் வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது, ஆங்காங்கே வளைவுகள், திருப்பங்கள் இருப்பது நல்லது, அவசியமும் கூட. வாகன ஓட்டிகளுக்கு முன் சாலைகள் நீண்டதாய், நேராய் இருந்தால், இரு ஆபத்துக்கள் உண்டு. ஒன்று... வேகம். நீண்ட நேரான பாதையில் அதிலும் எதிரே எந்தவித வாகனமும் இல்லை என்பதைக் காணும் போது, அளவுக்கு மீறிய வேகம் தலைதூக்கும் ஆபத்து உண்டு. இரண்டாவது ஆபத்து அயர்வு... நீண்ட, நெடிய பாதைகளில் வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது கண்ணயரும் ஆபத்தும் உண்டு. வாழ்வுப் பாதையும் நீண்ட நேர்கோடாய் இருந்தால், வேகத்தையும், சலிப்பையும் உண்டாக்கும்.
இறைவன் நடத்திச் செல்லும் நம் வாழ்வுப் பாதைகள் வளைந்து, நெளிந்து செல்லும் பாதைகள், திருப்பங்கள் நிறைந்த பாதைகள். எதிர்பார்த்த, எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த இந்தப் பாதைகளில் ஒன்று மட்டும் நிச்சயம். கடவுள் நம்மோடு நடக்கிறார். நம்மை வழி நடத்துகிறார். பாதைகளை நேராக, எளிதாக மாற்றுவதை விட, நம் பார்வைகளை இறைவன் தெளிவாக்குகிறார். திருப்பாடல் 23ன் மையக் கருத்தை மீண்டும் உங்களுக்கு நினைவுப்படுத்துகிறேன். ஆண்டவர் நமது ஆயனாக இருப்பதால், இம்மண்ணுலகம் ஒரு நொடியில் விண்ணுலகமாய் மாறி விடாது. நாம் நடக்கும் பாதைகள் எல்லாம் மலர்கள் மட்டும் பூத்துச் சிரிக்கும் பட்டு மெத்தையாய் மாறி விடாது. இருளும், துயரும் நிறைந்த இம்மண்ணுலகில், மலர்களோடு முள்ளும் புதர்களும் உள்ள சிக்கலானப் பாதையில் இறைவன் நம்முடன் இருக்கிறார். இதுதான் திருப்பாடல் 23 நமக்குத் தரும் நம்பிக்கை.

வாழ்க்கைப் பாதையைப் பற்றி சிந்திக்கும் போது, வேறொரு எண்ணமும் மனதில் எழுகிறது. நமது இந்திய மரபில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் 'தலையெழுத்து' என்ற எண்ணத்துடன் வாழ்க்கைப் பாதையை இணைத்துச் சிந்திப்பது பயனளிக்கும்.
நாம் பிறந்த நேரம், நட்சத்திரம், நம் குலம், குடும்பம் இவைகளை வைத்து நம் ஒவ்வொருவரின் வாழ்க்கை நிர்ணயிக்கப்பட்டு விட்டது என்பதைத் தான் நம் 'தலையெழுத்து' என்ற எண்ணம் வலியுறுத்துகிறது. இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால், நமது வாழ்க்கைப் பாதை நாம் நடக்க ஆரம்பிக்கும் முன்பே தெளிவாக வரையப்பட்டுவிட்டது, தீர்மானிக்கப்பட்டு விட்டது. வேறு வழிகளில் நம்மால் செல்ல முடியாது, இறைவன், அல்லது நமது விதி, அல்லது நமது தலையெழுத்து வரைந்துள்ள பாதையில் நாம் அனைவரும் சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகள் போல நடக்கிறோம். தலையெழுத்துடன் தொடர்புள்ள இந்த எண்ணங்கள் அனைத்தும் தவறானவை.
ஆயனாம் இறைவன் நம்மை வாழ்வுப் பாதையில் வழிநடத்திச் செல்வதற்கும், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒரு பாதையில் நம்மைக் கட்டி இழுத்துச் செல்வதற்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் உண்டு. மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் இவை.
நம்மைப் படைத்து, தினமும் நம்மைப் பேணி வளர்த்து வழி நடத்திச் செல்வது இறைவன் தான். ஆனால், அவர் நம்மை வழிநடத்த நமது சம்மதம் தேவை.
ஆயன், ஆடுகள் என்ற மையக் கருத்துடன் இத்திருப்பாடலை நாம் சிந்தித்து வருவதால், அவைகளுடன் தொடர்புடைய ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
ஆயன் ஒருவர் தன் கிடையில் ஆடுகளைச் சேர்த்துவிட்டு உறங்கச் செல்கிறார். அடுத்த நாள் காலையில் கிடையிலிருந்து ஓர் ஆடு காணவில்லை. வேலியில் உள்ள ஒரு ஓட்டை வழியே அது வெளியேச் சென்றுவிடுகிறது. காணாமல் போன ஆட்டை மிகச் சிரமப்பட்டுத் தேடி மீண்டும் கொண்டு வந்து கிடையில் சேர்க்கிறார். அடுத்த நாளும் அந்த ஆடு காணாமல் போகிறது. மீண்டும் தேடிக் கண்டு பிடிக்கிறார். பல முறை இவ்வாறு ஆனதால், அவரது நண்பர் ஒருவர் அவருக்கு ஆலோசனைத் தருகிறார். "அந்த ஆட்டைக் கட்டிப் போடு. அதே நேரம் அந்த வேலியில் உள்ள ஓட்டையை அடைத்து விடு." என்பது நண்பரின் ஆலோசனை. ஆயன் அவரிடம், "வேலியில் உள்ள ஓட்டையை அடைத்தாலோ, ஆட்டைக் கட்டிப் போட்டாலோ அந்த ஆட்டின் சுதந்திரம் பறிபோய்விடும். அப்படி நான் செய்ய மாட்டேன்." என்று சொல்கிறார்.
நடைமுறைக்கு ஒத்துவராத ஒரு பதில். ஆனால், ஆயனின் இந்த பதில் ஆண்டவனாம் ஆயன் நடந்து கொள்ளும் முறையைத் தெளிவுபடுத்தும் ஒரு பதில். கட்டிப் போடுதல், கடிவாளம் மாட்டி, வலுக்கட்டாயமாய்த் தான் வகுத்த பாதையில் இழுத்துச் செல்லுதல், வேறு பாதைகளையெல்லாம் மூடிவிடுதல் போன்றவை நம் சுதந்திரத்தைப் பறிக்கும் முயற்சிகள். நாம் எத்தனை முறைகள் காணாமல் போனாலும், நம்மைத் தேடிவரும் ஆயன், நம்மை மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொள்ள முயல்வாரே தவிர, தன்னுடன் நம்மை கட்டிப் போட மாட்டார். நாம் தவறிச் செல்லும் போது, தவறுகளைச் சுட்டிக் காட்டுவார், தட்டிக் கேட்பார். ஆனால், தவறக்கூடிய பாதைகளை அடைத்து விட மாட்டார். பாதைகளை அடைத்து, வேலிகளை மூடி, நம்மைச் சிறைப்படுத்துவது இறைவனின் பணி அல்ல, இறைவனின் பாணி அல்ல.
 நாமாகவே மனம் உவந்து, உளம் மகிழ்ந்து, முழு மன சுதந்திரத்துடன் அவர் காட்டும் பாதையில் செல்வதைத் தான், "தம் பெயர்க்கேற்ப எனை நீதி வழி நடத்திடுவார்." என்ற வரியில் சொல்கிறார் திருப்பாடலின் ஆசிரியர். அந்தப் பாதையில் தட்டுத் தடுமாறினாலும், தவறி விழுந்தாலும் அருகில் வந்து நம்மை எழுப்பி விட்டு மீண்டும் நம்மை நடக்கத் தூண்டுபவர் தாயாய், தந்தையாய், ஆயனாய் நம்மை வழி நடத்தும் இறைவன்.







All the contents on this site are copyrighted ©.