2010-11-02 15:38:19

குடும்ப ஜெபத்தின் இன்றியமையாமையை வலியுறுத்தியுள்ளார் சீரோ மலபார் ரீதி ஆயர்.


நவ 02, 2010. இன்றைய நகர வாழ்வின் பிரச்னைகளை எதிர்நோக்க சிறந்த வழி, குடும்பங்களில் ஒன்றிணைந்து ஜெபிக்கும் முறைகளுக்கு உயிரோட்டம் கொடுப்பதேயாகும் என்றார் சீரோ மலபார் ரீதி சபையின் பொதுநிலையினருக்கான அவையின் தலைவர் ஆயர் மேத்யூ அரக்கல்.

இந்திய தலைநகர் டெல்லியில் வாழும் சீரோ மலபார் கத்தோலிக்கர்களுக்கென கருத்தரங்கு ஒன்றைத் துவக்கி வைத்து உரையாற்றிய ஆயர், ஒன்றிணைந்து குடும்பங்கள் ஜெபிக்கும்போது இன்றைய நவீனகாலப் பிரச்னைகளை மேற்கொள்வதற்கான வலிமை கிடைக்கும் என்றார்.

திருச்சபையின் சக்தி என்பது அதன் அங்கத்தினர்களின் விசுவாசம் மற்றும் அர்ப்பணத்தைச் சார்ந்து உள்ளது என்பதையும் வலியுறுத்தினார் சீரோ மலபார் ஆயர் அரக்கல்.

திருச்சபைக்கென தங்கள் திறமைகளை விசுவாசிகள் அளித்துள்ள இடங்களில் எல்லாம் திருச்சபை அபரிமிதமாக வளர்ந்துள்ளதைக் காணமுடிகிறது எனவும் கூறினார் அவர்.

டெல்லி வாழ் சீரோ மலபார் ரீதி கத்தோலிக்கர்களுக்கான இக்கருத்தரங்கை டெல்லி பேராயர் வின்சென்ட் கொன்செசாவோ துவக்கி வைத்தார்.








All the contents on this site are copyrighted ©.