2010-11-01 15:26:13

பாக்தாத்தின் கத்தோலிக்கப் பேராலயத்தில் நடத்தப்பட்டத் தாக்குதல் குறித்து திருத்தந்தை ஆழ்ந்த கவலை


நவம்பர் 1, 2010 - ஈராக் தலைநகர் பாக்தாத்தின் சீரோ கத்தோலிக்கப் பேராலயத்தில் இஞ்ஞாயிறன்று மாலை இடம்பெற்ற தாக்குதலில் பலர் உயிரிழந்தது மற்றும் காயமடைந்தது குறித்து தன் ஆழ்ந்த கவலையை இத்திங்கள் அனைத்துப் புனிதர் விழாவன்று வழங்கிய மூவேளை ஜெப உரையின் போது வெளியிட்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

அன்பு மற்றும் ஒப்புரவின் இடமான தேவாலயத்தில் ஞாயிறு திருப்பலிக்கெனக் கூடியிருந்த விசுவாசிகள் மீது நடத்தப்பட்ட இவ்வன்முறைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கெனச் செபிப்பதாகவும் கூறினார் பாப்பிறை.

மீண்டும் ஒருமுறை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள ஈராக் கத்தோலிக்க சமூகம் உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழவேண்டியதன் அவசியத்தையும் தன் மூவேளை ஜெப உரையின் போது வலியுறுத்தினார் அவர்.

மத்தியக்கிழக்குப் பகுதியில் தொடர்ந்து வன்முறைகளுக்கு உள்ளாகி வரும் மக்களின் சார்பாக அமைதிக்கான விண்ணப்பத்தை மீண்டும் ஒருமுறை விடுவதாக உரைத்த பாப்பிறை, அமைதி என்பது இறைவனின் கொடையெனினும், அது அனைவரின் ஒன்றிணைந்த முயற்சியின் பயனுமாகும் என மேலும் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.