2010-10-30 16:21:13

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் திருத்தந்தையைச் சந்தித்தனர்


அக்.30, 2010. 'இத்தாலியின் கத்தோலிக்க நடவடிக்கை' என்ற அமைப்பினைச் சார்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இச்சனிக்கிழமையன்று காலை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுடன் இணைந்து உரோம் நகரின் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் திருத்தந்தையைச் சந்தித்து உரையாடினர்.

700 குருக்கள், 25 ஆயர்கள் என திருச்சபை அதிகாரிகளும் உடனிருக்க, ஒரு சிறுவன், ஒரு இளைஞர், ஓர் ஆசிரியர் என்று மூவர் திருத்தந்தையை நோக்கி கேள்விகளை முன் வைக்க, திருத்தந்தையும் அவைகளுக்குப் பதிலளித்து மாணவர்களுடன் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

இயேசுவைப் பின்பற்றி வளர்வது என்பது என்ன? இதில் யார் எனக்கு உதவ முடியும்? எனச் சிறுவன் ஒருவன் கேள்வியை முன் வைக்க, அதற்குப் பதிலளித்த திருத்தந்தை, இயேசுவில் வளர்வது என்பது ஜெபத்தில் அவருக்குச் செவி மடுப்பதும், அவரோடு உரையாடுவதும், திருவருட்சாதனங்களில் அவரைச் சந்திப்பதும் என்றார்.

மேலும், நண்பர்களோடும் எழைகளோடும் நோயாளிகளோடும் நட்புணர்வு பாராட்டி, அவர்களோடு இணைந்து நாம் வளர வேண்டும் என்றார் திருத்தந்தை. இயேசுவில் வளரும் பாதையில் பெற்றோர், குருக்கள், மற்றும் ஆசிரிய வழிகாட்டிகள் உதவ முடியும் எனவும் கூறினார்.

உண்மையான அன்பை எவ்வாறு கற்றுக் கொள்வது என்ற இளைஞன் ஒருவரின் கேள்விக்கும், வருங்காலத் தலைமுறைக்கு வழிகாட்டியாக இருப்பது எவ்வாறு என்ற ஆசிரியரின் கேள்விக்கும் பதிலளித்தார் பாப்பிறை 16 ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.