2010-10-29 15:19:30

திருப்பீடத்தின் அறிவியல் கழகத்தின் நிறைவுக் கூட்டத்தில் திருத்தந்தையின் செய்தி


அக்.29, 2010 – அறிவியல், வாழ்வின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வுகள் தரும் அல்லது அறிவியல் என்றாலே பயந்து விலக வேண்டும் என்ற இரு மிகைப்படுத்தப்பட்ட நிலைகள் குறித்த எச்சரிக்கையைத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழங்கினார்.
“இருபதாம் நூற்றாண்டின் அறிவியல் பாரம்பரியம்” என்ற மையக் கருத்துடன் கூடிய திருப்பீடத்தின் அறிவியல் கழகத்தின் நிறைவுக் கூட்டத்தில் இவ்வியாழனன்று பேசியத் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
அறிவியலின் வெகு வேகமான வளர்ச்சியைக் கண்டு பலர், வாழ்வின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் அறிவியல் வழி விடைகள் தேடுவதும், மற்றொரு புறம் அறிவியல் என்றாலே ஆபத்து என்ற அச்சத்துடன் அதைக் கண்டு ஒதுங்குவதும் மக்களிடையே உள்ள இரு வேறு துருவங்களைப் போன்ற போக்குகள் என்று சுட்டிக் காட்டினார் திருத்தந்தை.
அறிவியலின் பெயரால் இங்கு நாம் கூடியிருப்பது, திருச்சபை அறிவியல் மீது கொண்டுள்ள மதிப்பைக் காட்டுகிறது என்று கூறிய பாப்பிறை, அறிவியலில் ஈடுபட்டுள்ள அறிஞர்கள் மெய்யியலிலும் ஆர்வம் காட்டி, அதன் முறைகளைப் பின்பற்றித் தங்கள் முடிவுகளை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.21ம் நூற்றாண்டுக்கான அறிவியல் முயற்சிகள் முழு மனித முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற தன் இறுதி வேண்டுகோளுடன் தன் உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.







All the contents on this site are copyrighted ©.