2010-10-29 15:10:48

அக்டோபர் 30. நாளும் ஒரு நல்லெண்ணம்OO


சவால்கள் நம்மைச் சந்திக்கும்போது வாழ்க்கை நமக்கு ஒரு சோதனைக்களமாக மாறிவிடுகின்றது. புயல்கள் வந்து அடித்துவிட்டு செல்வது போல நமது வாழ்விலும் கடினமான கணங்கள் வந்து மறைகின்றன. அந்தப் புயல் போன்ற கணங்களுக்குள் நாம் இருக்கும்போது எல்லாமே இயலாதவையாக நமக்கு தெரியும். நமக்கு அடிக்கடி பிறரின் உதவிகள் தேவைப்படும். புயல் ஒன்று வீசும் போது அதன் கண்போன்று உள்ள புயலின் மையம் அமைதியாக இருக்குமாம். நமது வாழ்கையிலும் அது போல மாறி மாறி சோதனைகள் வரும் போது, நமது புள்ளியாக இருப்பவர் கடவுள்தான். புயல்கள் வரும்போது நமது வாழ்க்கையின் தடம் மாறிப்போகின்றது. ஓயாத புயல் போன்று நமக்குச் சோதனைகள் வாழ்க்கையில் தென்படத் தொடங்குகின்றன. நமது கால்கள் மேலே நடைபயில மறுக்கின்றன. வாழ்வு எப்படி தொடர்ந்து போகும் என்று நமக்குள் ஏராளமான கேள்விகள் நம்மைத் துளைத்து எடுக்கின்றன. இந்த வேளையில் நமக்குள் உள்ள விசுவாசத்தோடு நம்மை வழிநடத்த வல்லவராக உள்ளவர் கடவுள் ஒருவர் தான். அவர் இன்றி அணுவும் அசையாது. நம்மைச் சுற்றி புயல் வீசினாலும் நாம் கடவுளின் கண்மணியில்தான் இருக்கின்றோம் என்ற குலையாத, குறையாத விசுவாசம் நமக்கு வேண்டும். அது அவ்வளவு எளிதல்ல. கடினமானது. ஆனால் நாம் கடவுளை நம்பித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் அவர்தான் நமது பக்கத்தில் இருந்து நம்மை வழிநடத்திச் செல்ல வல்லவராய் இருக்கின்றார். அதை நாம் கண் கூடாகக் காண முடியாதுதான். ஆனால் நம்பிக்கை இருந்தால், நாம் அதை அனுபவிக்கமுடியும்.

இன்றைய சிந்தனைகளைத் தந்தவர் அமலமரி தியாகிகள் சபை குரு இரத்னராஜ்.







All the contents on this site are copyrighted ©.