2010-10-27 16:32:06

ஈராக்கின் முன்னாள் துணைப் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டாம் என வத்திக்கான் வேண்டுகோள்


அக்.27, 2010 - ஈராக்கின் முன்னாள் துணைப் பிரதமர் Tariq Azizக்கு வழங்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டாம் என வத்திக்கான் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஈராக்கின் முன்னாள் அரசுத் தலைவர் சதாம் உசேன் காலத்தில் அவருக்கு உதவியாக இருந்த துணைப் பிரதமர் Aziz, அரசுத்தலைவருடன் சேர்ந்து பிற இஸ்லாமியப் பிரிவினர் மேல் வன்மையான அடக்கு முறைகளைக் கையாண்டார் என்று அவருக்கு ஈராக் தலைமை நீதி மன்றம் இச்செவ்வாயன்று தூக்கு தண்டனை வழங்கியது.
இந்தத் தீர்ப்பை நிறைவேற்ற வேண்டாமென வத்திக்கான் சார்பில் பேசிய திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபைக் குரு பெதெரிகோ லொம்பார்தி, மரண தண்டனைக்கு எதிராக திருச்சபையின் நிலை என்றும் தெளிவாக உள்ளதென்று கூறினார்.
கடந்த சில ஆண்டுகள் ஈராக் சந்தித்து வரும் பல்வேறு பிரச்சனைகளைத் தீர்க்க அந்நாடு ஒப்புரவிலும் இன்னும் பிற வழிகளிலும் கட்டியெழுப்பப்பட வேண்டிய இச்சூழலில், Tariq Azizக்கு எதிரான தூக்கு தண்டனையை நிறைவேற்றாமல் இருப்பது ஒப்புரவில் அந்நாட்டை வளர்க்கும் ஒரு வழி என்று அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
இத்தூக்கு தண்டனையை நிறுத்த வத்திக்கான் மேற்கொள்ளும் முயற்சிகள் அரசுகளுக்கிடையேயான முயற்சியாகவே இருக்கும் என்று வத்திக்கானின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார் திருப்பீடத்தின் அதிகாரப் பூர்வ பேச்சாளர் அருள்தந்தை பெதெரிகோ லொம்பார்தி.74 வயது நிரம்பிய Tariq Azizன் இயற்பெயர் Mikhail Yuhanna என்பதும், இவர் கால்தியன் ரீதி கத்தோலிக்கர் என்பதும் குறிப்பிடத் தக்கது.







All the contents on this site are copyrighted ©.