2010-10-27 14:34:03

அக்டோபர் 28 – நாளும் ஒரு நல்லெண்ணம்


இம்மாதத் துவக்கத்தில் காந்தி ஜயந்தியைக் கொண்டாடினோம்.

இன்றையத் தலைமுறையினரிடம் காந்தி யாரென்று கேட்டால் சுதந்திரம் வாங்கிக்கொடுத்தவர் என்ற அளவில் தெரிந்திருக்கும். ஆனால் அவரின் கொள்கைகள் பற்றிக் கேட்டால் விரிவாக அவர்களால் பதில் சொல்ல முடியாது. தினசரி பயன்பாட்டில் உள்ள பணத்தில் அவர் படம் உள்ளதால் அவரைப்பற்றிய ஞாபகங்கள் தொடர்ந்து கொண்டிருக்கலாம். ஆனால், அவரால் ஜெயித்துக் காண்பிக்கப்பட்ட கொள்கைகள் இன்றும் நமக்கு பயனுள்ளதாக இருக்கிறதா என நாம் சிந்திக்கவேண்டும்.

காந்தியின் சிந்தனைகள் எல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராதவை என்று நிறைய பேர் சொல்லிக் கொண்டு திரியலாம். இத்தகைய ஒரு பின்னணியில் கிராமியப் பொருளாதாரம் குறித்த அவரின் கருத்துக்களைக் காண்போமா?

இன்றும் கூட பெரும்பான்மை இந்தியா கிராமங்களில் தான் வாழ்கின்றது. ஆனால் அந்த பெரும்பான்மையினரின் வாழ்க்கை நிலை எவ்வாறு உள்ளது?.

காந்தி சொன்னது கிராமங்களை வலுசேர்க்க வேண்டும் என்பது. கிராம சுயராஜ்ஜியம் என்பதே அவரின் மந்திரச் சொல்லாக இருந்தது

உழைக்க கைகள் இருக்கின்றன, பாடுபட நிலவளமும் நீர்வளமும் இருக்கின்றன. ஆனால், அவர்கள் குழுக்களாக இயங்க ஒரு கட்டமைப்பு வசதியும், சிறிது முதலீடும் இல்லை.

பெரிய பெரிய தொழிற்சாலைகள், நிறுவனங்கள் என்று, பல்லாயிரம் கோடிகளை முதலீடு செய்து ஆரம்பிக்கும் நாம், கிராமங்களையும் விவசாயத்தையும் முன்னேற்ற என்ன செய்துள்ளோம்?

சிறு குறுந்தொழில்கள், குடிசைத் தொழில்கள், மனித வளம் அதிகம் பயன்படும் தொழில்களென்று பார்த்துப் பார்த்து, ஊக்கபடுத்தத் தவறிவிட்டோம். விவசாயத்தைக் கை விடாமல், கிராமங்களை முன்னேற்றுவோம்.

காந்தியச் சிந்தனைகள், குறிப்பாக அவரின் பொருளாதாரச் சிந்தனைகள், உண்மையான விடுதலையை மனித குலத்திற்கு நல்கும் என நம்புவோம்.








All the contents on this site are copyrighted ©.