2010-10-26 16:11:18

விவிலியத் தேடல்


RealAudioMP3
"அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தன் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்." திருப்பாடல் 23ன் மூன்றாம் இறைவசனம் இது. இதன் முதல் பகுதியை சென்ற இரு வாரங்கள் சிந்தித்தோம். இன்று இரண்டாம் பகுதியில் நம் தேடலை ஆரம்பிக்கிறோம். "தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்." என்ற வரியை "தம் பெயருக்காக எனை நேர்வழியில் நடத்திடுவார்." என்றும் சில மொழிபெயர்ப்புகளில் நாம் காணலாம். நீதி வழி, நேர் வழி என்ற சொற்றொடரைப் பற்றி நமது சிந்தனைகள் இன்று அமையட்டும்.
இரு புள்ளிகளை இணைக்கும் மிகச் சுருக்கமான தூரம் நேர் கொடு. 'ஜியோமிதி' அல்லது 'வடிவக்கணிதம்' என்பதில் கூறப்படும் ஒரு விதிமுறை இது. இது கணிதத்தின் விதி முறை. வாழ்வில், ‘நான்’ என்ற புள்ளிக்கும் ‘எனது இலக்கு’ என்ற புள்ளிக்கும் இடையே உள்ள தூரம் சுருக்கமான நேர் கொடு அல்ல. நெளிவு, சுளிவுகள் நிறைந்த பாதை. பல சமயங்களில் இது சிக்கலான பாதையும் கூட.

திருப்பாடல் 23ன் மூன்றாம் வரிகளைக் குறித்து Harold Kushner தன் புத்தகத்தில் எழுதும் போது, ஒரு கதையுடன் தன் எண்ணங்களை ஆரம்பிக்கிறார். யூதப் படிப்பினைகள் அடங்கிய Talmud என்ற நூலில் காணக் கிடக்கும் ஒரு கதை இது. வழிப் போக்கர் ஒருவர் ஒரு சிறுவனிடம் அருகிலுள்ள ஊருக்கு வழி கேட்கிறார். வழி சொல்கிறான் சிறுவன். அப்போது அவர் அச்சிறுவனிடம், "அந்த ஊருக்குச் செல்ல ஏதாவது குறுக்கு வழி உண்டா?" என்று கேட்கிறார். சிறுவன் பளிச்சென்று ஒரு பதில் சொல்கிறான்: "ஒரு நீண்ட குறுக்கு வழி உள்ளது. அல்லது ஒரு குறுகிய நீண்ட வழி உள்ளது." என்கிறான் சிறுவன்.
திருப்பாடல் 23ல் கூறப்பட்டுள்ள நீதி வழி, நேரிய வழி என்பதைக் குறிக்கும் எபிரேயச் சொற்கள்: "ma’aglei tzedek". இதைச் சரியான மொழிபெயர்ப்பு செய்தால், "நேரியதொரு திசை நோக்கி சுற்றி, வளைந்து செல்லும் பாதை." என்று பொருள் கொள்ளலாம். அடைய வேண்டிய இலக்கு நேரியதென, நல்லதென, உண்மையென நாம் உணர்ந்தால், அதை அடைவதற்கு நாம் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள் நீண்டதாக, பல சமயங்களில் நம் பொறுமையைச் சோதிப்பதாக அமையும்.

எந்த ஓர் உயரிய இலக்கும் தானாகவே மடியில் வந்து விழாது. நாம் தான் அதைத் தேடிப் போக வேண்டும். இந்தப் பயணத்திற்கு மிகுந்த பொறுமை தேவை. கூட்டுப் புழு ஒன்று வண்ணத்துப் பூச்சியாக மாற பொறுமை, போராட்டம் இரண்டும் தேவை என்பது நமக்குத் தெரியும். சென்ற ஆண்டு விவிலியத் தேடலில் இயேசுவின் உருமாற்றம் பற்றி நாம் சிந்தித்தபோது கூட்டுப் புழுவின் பொறுமையான போராட்டம் பற்றி பேசினோம்.
இவ்வாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி, சுரங்கத்தில் பணி செய்ய பூமிக்கடியில் சென்ற 33 மனிதர்கள் வெகு சாதாரணத் தொழிலாளர்களாக அந்தச் சுரங்கத்தில் இறங்கினார்கள். 69 நாட்கள் சென்று அக்டோபர் 13ம் தேதி உலகப் புகழ்பெற்ற வீரர்களாய் பூமிக்கடியிலிருந்து வெளி வந்தனர். கூட்டுப்புழு வண்ணத்துப் பூச்சியாவது போல், பூமிக்கடியில் இந்தத் தொழிலாளர்கள் புதைந்திருந்த போது அவர்களில் ஏற்பட்ட அற்புத மாற்றங்களைச் சென்ற விவிலியத் தேடல், ஞாயிறு சிந்தனை இரண்டிலும் சிந்தித்தோம்.
உலகத்தின் பார்வையில், எண்ணங்களில் ஆகஸ்ட் 5 அக்டோபர் 13 என்ற இரு புள்ளிகள் மட்டும் பதிந்துள்ளன. இந்த இரு நாட்களுக்கும் இடையே நாம் ஒரு நேர்கோடு வரைந்து இந்த சம்பவத்தைச் சுருக்கி விட்டோம். இந்த இரு நாட்களுக்கும் இடையே 69 நாட்களே இருந்தன. இது நம் பார்வை, நம் கணக்கு. அந்த 33 தொழிலாளர்களுக்கு இந்த இரு நாட்களுக்குமிடையே, 69 நாட்கள்... இல்லை, இல்லை... 69 யுகங்கள் சென்றன. அதாவது 1,656 மணிகள், 99,360 நிமிடங்கள் இவர்கள் பூமிக்கடியில் இருந்தனர். அதிலும் முக்கியமாக, இவர்கள் பணி செய்த சுரங்கம் பாறைகளால் மூடப்பட்ட ஆகஸ்ட் 5க்கும், இவர்கள் உயிருடன் உள்ளனர் என்று கண்டுபிடிக்கப்பட்ட ஆகஸ்ட் 22க்கும் இடையே, அந்த 17 நாட்கள், வெளி உலகில் இருந்த நமக்கு 17 நிமிடங்களாகப் பறந்திருக்கலாம். ஆனால், அங்கு புதையுண்டிருந்த தொழிலாளர்களுக்கு, அவர்களது குடும்பங்களுக்கு அந்த 17 நாட்கள் 24,480 நிமிடங்களாக, 14,68,800 நொடிகளாக நத்தை வேகத்தில் நகர்ந்திருக்கும். அந்த 69 நாட்கள்... அவர்களைப் பொறுத்தவரை பொறுமையை, போராட்டத்தை, நம்பிக்கையை, செபத்தைச் சொல்லித்தந்த பள்ளிக்கூடம். நம்மைப் பொறுத்தவரை இறுதி இரு நாட்கள் வீர, தீர கண்காட்சி. அவர்களைக் கேட்டுப் பார்த்தால் தெரியும் ஆகஸ்ட் 5 அக்டோபர் 13 என்ற இரு புள்ளிகளுக்கிடையே இருந்தது சுருக்கமான நேர்கோடா அல்லது பல திசைகளிலும் வளைந்து நெளிந்து சென்ற நீண்ட கோடா என்று.

பந்தயங்களிலும், விளையாட்டுகளிலும் உலகச் சாதனை படைத்துள்ள Usain Bolt, Florence Griffith Joyner, Sergey Bubka, Yelena Isinbayeva, Michael Phelps, Martina Navratilova, Roger Federer, Sachin Tendulkar, Muthaiah Muralidharan என்ற விளையாட்டு வீரர்களைக் கேட்டு பார்த்தால் தெரியும் அவர்களுக்கும் அவர்கள் அடைந்த சாதனைகளுக்கும் இடையே இருந்தது நேர்கோடா அல்லது நீண்ட, சிக்கலான வளைகோடா என்று. எத்தனையோ விளையாட்டு வீரர்கள் தங்கள் இலக்கை அடைவதற்குள் பொறுமை இழந்து சுருக்கு வழிகள், குறுக்கு வழிகள் என்று போதைப் பொருள்களின் உதவியை நாடியதும் நமக்குத் தெரிந்ததுதான்.
விளையாட்டைப் போலவே, அறிவியல் ஆய்வுகளில், அரசியலில், வர்த்தக நிறுவனங்களில், மக்கள் சேவையில் சாதனைகள் படித்தவர்களில் பலர் நேரிய வழியில், நீண்டு வளைந்து சென்ற கரடு முரடானப் பாதைகளில் பொறுமையுடன் சென்று, வரலாறு படைத்துள்ளனர்.

"தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்." என்ற வரியைத் திருப்பாடலின் ஆசிரியர் சொன்னபோது, பாலைவனத்தில் பல ஆண்டுகள் நீண்டு வளைந்து சென்ற கரடு முரடானப் பாதைகளில் அலைந்த தன் முன்னோரை அவர் நினைத்துப் பார்த்திருப்பார். அவர்கள் எகிப்திலிருந்து வெளியேறியபோது, கடவுள் அவர்களை வழி நடத்திய விதம் விநோதமாக இருந்தது. இதை விடுதலைப் பயண நூல் இவ்வாறு சொல்கிறது:
விடுதலைப் பயணம். 13: 17-18
மக்களைப் பார்வோன் அனுப்பியபோது, பெலிஸ்தியர் நாட்டு நெடுஞ்சாலைதான் நேர்வழி எனினும், அதன் வழியாகக் கடவுள் அவர்களை நடத்திச் செல்லவில்லை. ஏனெனில், “போரைக் கண்டு இம்மக்கள் மனம் தளர்ந்து எகிப்திற்கே திரும்பிவிடுவார்கள்என்றார் கடவுள். கடவுள் மக்களைப் பாலைநிலச் சுற்று வழியாக செங்கடலுக்குப் போகச் செய்தார். இஸ்ரயேல் மக்கள் படை அணிபோல எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிச் சென்றனர்.
இஸ்ரயேல் மக்கள் கடந்து சென்ற அந்த சீனாய் பாலைவனத்தை நடந்து கடக்க அதிகப்படியாக இருபது நாட்கள் ஆகும். குழந்தைகள், வயதானோர் ஆகியோரை மனதில் வைத்து இந்தப் பயணம் மிகவும் மெதுவாக மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அப்பாலை நிலத்தைக் கடக்க ஓரிரு மாதங்கள் ஆகலாம். ஆனால் இஸ்ரயேல் மக்கள் எடுத்துக் கொண்ட காலம் நாற்பது ஆண்டுகள்!
நாற்பது என்பது விவிலியத்தில் ஓர் அடையாள எண் எனக் கருதினாலும், அவர்கள் மேற்கொண்ட பயணம் நீண்ட காலம் எடுத்ததென்பது தெரிகிறது. அந்தப் பயணம் எகிப்து என்ற இடம் விட்டு, கானான் என்ற இடத்திற்குக் கடந்து சென்ற பயணம் அல்ல. அடிமைகள் என்ற நிலையைக் கடந்து உரிமை மக்கள், இறைவனின் குலம் என்ற உயரிய நிலையை அந்த மக்கள் உணரச் செய்த ஒரு பயணம் அது. எனவே, இது ஒரு நேர்கோட்டில் நடத்தப்பட்ட அதிவேகப் பயணம் அல்ல. சுற்றி வளைத்து, சிக்கித் தவித்து தங்கள் விடுதலையைத் தாங்களேக் கண்டெடுத்த ஒரு புனித பயணம்.
அசுர வேகத்தில் செல்லும் நமது உலகக் கண்ணோட்டத்தோடு இந்தப் பயணத்தைப் பார்க்கும் போது, அத்தனை ஆயிரம் மக்கள் அத்தனை ஆண்டுகள் வீணடித்து விட்டனரே என்று தான் நாம் கணக்கிடுவோம். நமக்கு எல்லாமே விரைவில், வெகு விரைவில், நொடிப் பொழுதில் நடக்க வேண்டும். நீளமான நடைப் பயணங்கள் (திருத்தலங்களுக்கென்று நாம் மேற்கொள்ளும் பயணங்கள்), அமைதியான ஆழ்நிலை தியானங்கள், ஆர, அமர, நிதானமாகச் செயல்படுதல் என்ற எண்ணங்கள் எல்லாம் நமது தினசரி வாழ்க்கையிலிருந்து மெதுவாக விடை பெற்று வருகின்றன. அமைதி, நிதானம், பொறுமை போன்ற வார்த்தைகள் நமது அகராதியிலிருந்தும் சிறிது சிறிதாக மறைந்து வருகின்றன.

அவசரமாய், ‘சட்டுபுட்’டென்று காரியங்களைச் செய்வதால், அதன் விளைவுகளையும் நாம் சந்திக்க வேண்டியுள்ளது. நமது அவசர உலகைப் படம் பிடித்துக் காட்ட Harold Kushner பகிரும் ஓர் அனுபவம் நமக்கு நல்ல பாடம். குடும்பத்தில் ஒருவர் இறந்தால், யூத மரபுப்படி ஏழு நாட்கள் துக்க நாட்களாக கடைபிடிக்கப்படும். இது பல மதங்களிலும் காணக்கிடக்கும் ஒரு பழக்கம்தான். Kushner ஒரு யூத குரு என்பதால், வியாபாரம் வேலை என்று எப்போதும் பரபரப்பான வாழ்க்கை நடத்தும் ஒரு சிலர் இந்த ஏழு நாட்களைக் குறித்து அவரிடம் கேள்வி எழுப்புவர். ஆலோசனை கேட்பர். தங்களுக்குத் தலைக்கு மேல் வேலைகள் இருப்பதாகவும் எனவே, இந்த ஏழு நாள் சடங்குகளை சுருக்கி ஓரிரு நாட்களில் நிறைவேற்ற முடியாதா? என்றும் அவரிடம் ஆலோசனை கேட்பார்கள். அவர்களுக்கு Kushner அளிக்கும் பதில் பொருள் நிறைந்த பதில்: “இந்த இழப்பால் உங்கள் உள்ளத்தில் ஏற்பட்டுள்ள வலிகளைப் போக்கவே இந்த ஒரு வாரச் சடங்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இவைகளை அவசரப்பட்டு முடித்தால், உங்கள் உள்ளத்தின் காயங்களை, வேதனைகளை ஆற்றுவதற்கு, குணமாக்குவதற்கு நீங்கள் நேரம் கொடுக்காமல் போய்விடுவீர்கள். இதனால் பாதிப்புக்கள் தொடரும். ஆறாத இந்த வேதனைகள் மீண்டும் மீண்டும் தலைதூக்கி உங்கள் வாழ்வை இன்னும் நீண்ட காலம் பாதிக்கும். இந்த ஏழு நாட்கள் நீண்டதொரு பயணம் என்று நினைத்து நீங்கள் சுருக்கினால், உங்களைத் தொடரும் வேதனைப் பயணம் மிக நீண்டதாய், சிக்கலானதாய் இருக்கும்.” என்று Kushner அவர்களை எச்சரிப்பாராம்.
காயங்கள் ஆறுவதற்கு நேரம் கொடுக்க வேண்டும். சாதனைகள் ஆற்றுவதற்கு நேரம் கொடுக்க வேண்டும். பொதுவாகவே வாழ்க்கையைச் சீராக நடத்துவதற்கு நேரம் கொடுக்க வேண்டும்.
வண்ணத்துப் பூச்சியாக மாற விரும்பும் கூட்டுப் புழு பொறுமையாய் போராட வேண்டும். அந்தப் போராட்டத்தினால் அதனுள் பெருகும் திரவம் அழகற்ற கூட்டுப் புழுவை அற்புதமான வண்ணத்துப் பூச்சியாக மாற்றும். கூட்டுப் புழுவின் பொறுமையான போராட்டத்தைப் பார்க்கச் சகிக்காமல் கூட்டுப் புழுவின் ஓட்டையை நாம் பெரிதாக்கினால், வெளி வருவது வண்ணத்துப் பூச்சியாக இருக்காது. வண்ணத்துப் பூச்சியைப் போல் வாழ்வை வண்ணமயமாக்கும் முயற்சி ஒரு நாளில் உருவாகும் அவசர முயற்சி அல்ல.அதிலும் சிறப்பாக, சில ஆழமான, அற்புதமான எண்ணங்களை சிந்திக்க, அவைகளைச் செயல் படுத்த நேரம் ஒதுக்க வேண்டும். நெடிய பயணம் மேற்கொள்ள வேண்டும். அந்த நெடிய, நீண்ட, நேரிய வழியில் ஆயனாம் இறைவன் நம்மை வழி நடத்த அவரிடம் மன்றாடுவோம்.







All the contents on this site are copyrighted ©.