2010-10-26 15:53:01

பூர்வீகக்குடிமக்களின் உரிமைகளுக்காக இயேசு சபை குரு உண்ணாவிரதம்


அக் 26, 2010. அரசியலமைப்பு மூலம் பூர்வீகக் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் அரசால் மதிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுடன் நியாயம் வேண்டி ஒருவாரமாக வெனிசுவேலா நாட்டில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார் இஸ்பானிய இயேசு சபை குரு ஒருவர்.

கொலம்பியாவுடன் ஆன எல்லைப்பகுதியில் உள்ள Zulia மாநிலத்தில் பூர்வீகக்குடிமக்களின் நில உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்பதை எடுத்துரைத்த 81 வயதான இயேசு சபை குரு ஹோஸே மரிய கோர்தா லஸார்தே, பூர்வீகக்குடியினர் தவறாக நடத்தப்படுவதாகவும் அவர்களின் உரிமைகளைப் பெற்றுத்தர தான் உயிரை விடவும் தயாராக இருப்பதாகவும் பத்திரிகையாளர்களிடம் எடுத்துரைத்தார்.

மேற்கத்தியக் கலாச்சாரம் இவர்களின் பகுதிகளில் புகுந்து வளர்ந்து வருவதால் பூர்வீக மக்களின் தொழில்களும் வழிபாட்டு முறைகளும், கலாச்சாரமும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்த இயேசு சபை குரு, பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைகளோடு ஒப்பிடும்போது தற்போதைய நிலைகள் மிகவும் கவலை தருவதாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஏறத்தாழ மூன்று இலட்சம் பூர்வீகக் குடிமக்கள் வாழும் வெனிசுவேலாவில் பூர்வீகக் குடிமக்களுக்கெனவே ஒரு பல்கலைகழகத்தை உருவாக்கியவர் இந்த இயேசு சபை குரு கோர்தா லஸார்தே என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.