2010-10-25 16:24:32

புனிதர்கள் மீதான ஆர்வம் விசுவாசிகளிடையே அதிகரித்து வருகிறது


அக்.25, 2010 - புனிதர்கள் மீதான ஆர்வம் மீண்டும் திருச்சபையில் விசுவாசிகளிடையே அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது என்றார் திருப்பீடத்தின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் இயேசு சபைக் குரு ஃபெதெரிக்கோ லொம்பார்தி.

இம்மாதம் 17ந்தேதி திருச்சபையில் 6 இறையடியார்கள் புனிதர்களாக அறிவிக்கப்பட்டபோது, உரோம் நகரில் கூடிய விசுவாசிகளின் கூட்டமே இதற்கு சாட்சி என்ற திருப்பீடப்பேச்சாளர், இந்த வைபவத்தின்போது சமூகத்தொடர்பாளர்களின் கூட்டமும் அதிகமாக இருந்ததையும் சுட்டிக்காட்டினார்.

மக்கள் எந்த விடயங்களில் அதிக ஆர்வமுடையவர்களாக இருக்கின்றார்களோ அதிலேயே பத்திரிகைத்துறையினரும் அதிக ஆர்வம் காட்டி செய்திகளை வழங்குவார்கள் என்ற உண்மை நிலையை மனதில் கொள்ளும்போது, இப்புனிதர் அறிவிப்புச் சடங்கின்போது பெரும் எண்ணிக்கையில் பத்திரிகைத்துறையினர் வந்திருந்தது புனிதர்கள் மீதான ஆர்வம் மக்களில் பெருகி வருவதன் எடுத்துக்காட்டாய் இருந்தது என்றார் குரு லொம்பார்தி.

மிகத்தூரமான இடங்களில் இருந்தும் மிக அதிகமாகச் செலவழித்தும் விசுவாசிகள் உரோம் நகருக்கு வந்து புனிதர் அறிவுப்புத் திருப்பலியில் கலந்து கொண்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.