2010-10-25 16:33:56

அக்டோபர் 26 நாளும் ஒரு நல்லெண்ணம்


ஓர் அதிகாலைப் பொழுதில் அந்த ஆசிரமக் குருவும் அவரது சீடர்களும் காட்டுப் பாதையில் சென்று கொண்டிருந்தார்கள். காலைநேரக் கண்விழிப்பில் இயற்கை ஆனந்த நடனமாடிக் கொண்டிருந்தது. அப்போது சீடர்கள் குருவிடம், “குருவே, கடவுளின் முகத்தை நாங்கள் காண உதவும்” என்று கேட்டார்கள். உடனே குரு நின்று, அந்த இடத்திலிருந்த சிறிய புல்லைச் சுட்டிக் காட்டி, “இதைப் பாருங்கள், இது பனித்துளியைத் தனது மெல்லிய இலையில் எவ்வளவு நளினத்துடன் தாங்கிக் கொண்டிருக்கின்றது என்று கவனியுங்கள்” என்றார். இவ்வாறு குரு சொல்லிக் கொண்டிருக்கும் போதே அதில் அவர் இலயித்து விட்டார். “வானகமே, இந்தப் பூமிக்கு இறங்கி வா. வந்து எங்கள் பார்வையை உன்னை நோக்கி எழுப்பு”என்று குரு பரவசத்தில் மெல்ல முணுமுணுத்ததைச் சீடர்கள் கேட்டனர். பின்னர் குரு சீடர்கள் பக்கம் திரும்பி, “காட்டில் நோக்கமின்றி நடக்காதீர்கள். மரங்களிலும் செடிகளிலும் மலர்களிலும் வழி நெடுகிலும் கடவுளின் கைவண்ணத்தைக் கவனியுங்கள்” என்றார்.

“ஒவ்வொரு நேரமும் நீ விண்ணைப் பார்க்கும் போது அல்லது ஓர் இலையை அல்லது ஒரு மரத்தை நீ தொடும் போது, கடவுள் உன்னிடம் இவையெல்லாமே நான்தான் என்று முணுமுணுக்கிறார்.”இப்படிச் சொன்னவர் ஹெலன் ரைய்ஸ்.








All the contents on this site are copyrighted ©.