2010-10-23 15:55:13

வறுமை எந்த வடிவில் இருந்தாலும் அது முழு மனித சமுதாயத்துக்கும் அவமானம் - பேராயர் சுல்லிக்காட்


அக்.23,2010. உலக அளவில் வறுமையை ஒழிப்பதற்கு வழிகள் இருக்கின்றன, ஆனால் அதற்கு நாம் விருப்பம் கொள்கிறோமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் திருப்பீட உயர் அதிகாரி ஒருவர்.

வறுமை ஒழிப்பு மற்றும் பிற வளர்ச்சி விவகாரங்கள் குறித்த ஐ.நா. பொது அவையில் உரையாற்றிய ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பிரான்சிஸ் சுல்லிக்காட், வறுமை எந்த வடிவில் இருந்தாலும் அது முழு மனித சமுதாயத்துக்கும் அவமானம் என்று பேசினார்.

ஏழ்மை மனித மாண்பை மிக ஆழமாகப் பாதிக்கின்றது என்று உரையாற்றிய அவர், மாண்புடன் வாழ்வதற்கான அடிப்படைக் கூறுகள் மறுக்கப்படும் போது மனிதன் கீழ்மைப்படுத்தப்படுகிறான் என்றார்.

இந்த 2010ம் ஆண்டில் 6 கோடியே 40 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கடும் ஏழ்மையில் வாழ்கின்றனர் என்றும் கடந்த ஆண்டில் உணவு, எரிபொருள் மற்றும் நிதி நெருக்கடியால் சுமார் நான்கு கோடிப் பேர் பசியால் வாடினர் என்றும் பேராயர் சுல்லிக்காட் தெரிவித்தார்.

உலகில் 2015ம் ஆண்டுக்குள் ஐந்து வயதுக்குட்பட்ட 12 இலட்சத்துக்கு மேற்பட்ட சிறார் இறக்கக்கூடும், இன்னும், 3,50,000 த்துக்கு மேற்பட்ட மாணவர் ஆரம்பக் கல்வியை முடிக்க முடியாமலும் சுமார் 10 கோடிக்கு மேற்பட்டவர்கள் சுத்தக் குடிநீர் வசதியின்றியும் இருப்பார்கள் என்றார் திருப்பீட அதிகாரி பேராயர் சுல்லிக்காட்.







All the contents on this site are copyrighted ©.