2010-10-23 15:53:15

மத்திய கிழக்கு ஆயர் மாமன்றத் தந்தையர் இறைமக்களுக்கு விடுத்த செய்தி


அக்.23,2010. மத்திய கிழக்குப் பகுதியில் என்றென்றும் நிரந்தரமாக இருக்கவல்ல நீதியுடன்கூடிய அமைதி இடம் பெறுவதற்கு சர்வதேச சமுதாயத்தைக் குறிப்பாக ஐக்கிய நாடுகள் நிறுவனத்தை அப்பகுதி மக்கள் விண்ணப்பிப்பதாக அப்பகுதிக்கானச் சிறப்பு ஆயர்கள் மாமன்றத் தந்தையர் கூறியுள்ளனர்.

ஐ.நா.பாதுகாப்பு அவையின் தீர்மானங்கள் மற்றும் பல்வேறு அரபுப் பகுதிகளில் இடம் பெறும் ஆக்ரமிப்புக்கள் நிறுத்தப்படுவதற்குத் தேவையான சட்டரீதியான நடவடிக்கைகள் எடுப்பதன் வழியாக இதனைச் செயல்படுத்துமாறு கேட்டுள்ளனர் அத்தந்தையர்.

வத்திக்கானில் இரண்டு வாரங்களாக நடைபெற்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கான முதல் சிறப்பு ஆயர் மாமன்றத்தின் நிறைவாக இம்மாமன்றத் தந்தையர் இறைமக்களுக்கென இச்சனிக்கிழமை வெளியிட்ட ஒன்பது பக்க செய்தியில் இவ்வாறு கேட்டுள்ளனர்.

இதன் மூலம் பாலஸ்தீனிய மக்கள் மாண்புடனும் பாதுகாப்புடனும் வாழக்கூடிய தனிப்பட்ட மற்றும் இறையாண்மைமிக்கத் தாயகத்தைக் கொண்டிருப்பார்கள் என்றும் இஸ்ரேல் நாடு, சர்வதேச சமுதாயத்தால் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் அமைதியையும் பாதுகாப்பையும் அனுபவிக்க முடியும் என்றும் அச்செய்தி கூறுகிறது.

யூதம், கிறிஸ்தவம், முஸ்லீம் ஆகிய மூன்று மதங்களுக்கும் பொதுவானத் தனது சரியான நிலையைப் எருசலேம் புனித நகரமும்,பெற முடியும் என்றுரைக்கும் அச்செய்தியில், இந்த இரண்டு தீர்வுகளும் கனவுகளாக மட்டும் இருக்காமல் உண்மை நிலையை எட்டும் என்ற மாமன்றத் தந்தையரின் நம்பிக்கையும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.