2010-10-22 15:57:04

மத்திய கிழக்கு நாடுகளுக்கானச் சிறப்பு ஆயர் மாமன்றம் 41 பரிந்துரைகளைத் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கத் திட்டமிட்டு வருகிறது


அக்.22,2010: இம்மாதம் பத்தாம் தேதியிலிருந்து வத்திக்கானில் நடைபெற்று வரும் மத்திய கிழக்கு நாடுகளுக்கானச் சிறப்பு ஆயர் மாமன்றம் சுமார் 41 பரிந்துரைகளைத் திருத்தந்தையிடம் சமர்ப்பிப்பதற்குத் தயாரித்து வருகின்றது.

கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடல், முஸ்லீம்கள் மற்றும் யூதர்களுடனானப் பல்சமய உரையாடல், மத்திய கிழக்கு நாடுகளில் கிறிஸ்தவர்கள் இருப்பதன் முக்கியத்துவம், கீழைரீதி கத்தோலிக்கச் திருச்சபைகளின் தனித்துவம் பாதுகாக்கப்படுதல், கத்தோலிக்கச் திருச்சபையின் ஆயர்கள், குருக்கள் மற்றும் பொதுநிலை விசுவாசிகள் மத்தியில் ஒன்றிப்பை வலுப்படுத்துதல், பிற கிறிஸ்தவ சபைகள் மற்றும் கிறிஸ்தவச் சமூகங்களுடன் ஐக்கியத்தை வளர்த்தல், அப்பகுதியில் குடியேற்றதாரர் தொடர்புடைய பிரச்சனைகளை உலகின் கவனத்துக்குக் கொண்டு வருதல், வழிபாட்டின் மற்றும் மனச்சான்றின் சுதந்திரங்கள் உட்பட சமய சுதந்திரத்தை ஊக்குவித்தல், மத்திய கிழக்கு நாடுகளில் கூட்டங்கள் வழியாகக் கத்தோலிக்க அதிகாரிகள் மத்தியில் ஒத்துழைப்பை ஊக்குவித்தல், குருக்கள், பொதுநிலையினர் உருவாக்கம் என சுமார் 41 பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இம்மாமன்றத்தில் முன்வைக்கப்பட்ட இப்பரிந்துரைகளின் இறுதி வடிவம் இச்சனிக்கிழமை காலை அமர்வில் வாசிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும். பின்னர் இம்மாமன்றத் தந்தையர்கள் திருத்தந்தையுடன் மதிய உணவு அருந்துவர்.

ஞாயிறு காலை வத்திக்கான் புனித பேதுரு பிசிலிக்கா பேராலயத்தில் திருத்தந்தை நிகழ்த்தும் கூட்டுத் திருப்பலியுடன் இந்த இரண்டு வார ஆயர்கள் மாமன்றம் நிறைவுக்கு வரும்.







All the contents on this site are copyrighted ©.