2010-10-21 15:17:46

பேராயர் மால்கம் ரஞ்சித்திற்கு இலங்கை தலத்திருச்சபையும், நாட்டுத் தலைவர்களும் பாராட்டு


அக்.21,2010 - இலங்கை கொழும்புப் பேராயர் மால்கம் ரஞ்சித் கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ளதை அந்நாட்டின் தலத்திருச்சபையும், நாட்டுத் தலைவர்கள், மற்றும் மக்கள் அனைவரும் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
இப்புதன் பொது மறைப் போதகத்தின் இறுதியில் திருத்தந்தை அறிவித்த 24 கர்தினால்களில் ஆசியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே கர்தினாலான கொழும்புப் பேராயர் மால்கம் ரஞ்சித்தை இலங்கையின் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்ச, அந்நாட்டு பிரதம அமைச்சர் D.M.ஜெயரத்ன உட்பட பல தலைவர்களும் திருச்சபைத் தலைவர்களும் பாராட்டியுள்ளனர்.
பேராயரின் இந்த புதிய நிலை குறித்து பிற கிறிஸ்தவத் தலைவர்கள், புத்த மதத் தலைவர்கள் என அனைவரும் வாழ்த்துக்கள் அனுப்பியுள்ளனர்.மறைந்த கர்தினால் தாமஸ் பெஞ்சமின் கூரே 1965ல் இந்நிலைக்கு உயர்த்தப்பட்டதற்குப் பின், இலங்கையில் இரண்டாவது கர்தினாலாக பேராயர் ரஞ்சித் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் நவம்பர் மாதம் 20ம் தேதி திருத்தந்தையால் கர்தினாலாக உயர்த்தப்படுவார்.







All the contents on this site are copyrighted ©.