2010-10-21 15:17:02

தென்கொரியவின் பொருளாதார வளர்ச்சியோடு சமூக நீதியும் பொதுநலன் மீதான அக்கறையும் சேர்ந்து செல்ல வேண்டும் - திருத்தந்தை


அக்.21,2010 - தென்கொரிய நாட்டின் பொருளாதார வளர்ச்சியோடு சமூக நீதியும் பொதுநலன் மீதான அக்கறையும் சேர்ந்து செல்ல வேண்டும் என்று இவ்வியாழனன்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருப்பீடத்துக்கானத் தென்கொரியப் புதிய தூதர் Han Hong-soon டமிருந்து நம்பிக்கைச் சான்றிதழைப் பெற்று உரையாற்றிய திருத்தந்தை, அந்நாட்டின் குறிப்பிடத்தக்கப் பொருளாதார வளர்ச்சி நன்கொடை வழங்கும் நாடாக அதனை மாற்றியுள்ளது குறித்தத் தனது பாராட்டையும் தெரிவித்தார்.
நற்செய்தி உண்மைகளை அறிவிப்பதில் தன்னை ஈடுபடுத்தியுள்ள கொரியத் திருச்சபை, அரசியல் ஆதாயங்களால் கட்டுப்படுத்தப்படும் குறுகிய மனப்பான்மை கொண்ட அனாவசியத் தலையீடுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.
அடுத்த மாதம் சோலில் நடைபெறவிருக்கின்ற ஜி20 உச்சி மாநாடு குறித்தும் பேசிய திருத்தந்தை, ஆசிய-பசிபிக் பகுதியில் பாதுகாப்பு, பொருளாதார ஒருங்கிணைப்பு, மற்றும் அமைதியை ஏற்படுத்துவதில் தென் கொரியாவின் குறிப்பிடத்தக்க பங்கைப் புகழ்ந்து பேசினார்.
திருச்சபை, மனித மாண்பை மதிக்கும் கண்ணோட்டத்தில் பணி செய்ய வேண்டிய உறுதியானக் கடமையைக் கொண்டுள்ளதால், இயற்கைச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு மனித வாழ்வை அதன் தொடக்க முதல் இறுதி வரைக் காப்பதற்கும், நிலையானக் குடும்ப வாழ்வைப் பேணுவதற்கும் தன்னை அர்ப்பணித்துச் செயல்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார். சண்டைகள் இடம் பெறும் இடங்களில் அமைதி மற்றும் நீதியைக் கட்டிக் காப்பதற்கும் திருச்சபை பணி செய்ய வேண்டிய கடமையைக் கொண்டுள்ளது என்றும் திருத்தந்தை கொரியத் தூதரிடம் சுட்டிக் காட்டினார்.







All the contents on this site are copyrighted ©.