2010-10-20 15:28:04

உலகில் அமைதிக் கலாச்சாரத்தை உருவாக்க பல்வேறு அரசுகள் மதங்களின் உதவியை நாடுதல் அவசியம் - பேராயர் பிரான்சிஸ் சுல்லிக்காட்


அக்.20,2010. நாடுகளுக்கிடையேயான மோதல்களைத் தவிர்ப்பதற்கும், உறவை வளர்ப்பதற்கும் அரசுகள் மன்னிப்பு, ஒப்புரவு ஆகிய வழிகளைத் தேட வேண்டும் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஐ.நா.விற்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பிரான்சிஸ் சுல்லிக்காட் நியூயார்க்கில் நடைபெற்றுவரும் ஐ.நா.வின் கூட்டத்தில் உரையாற்றுகையில் இக்கருத்தை வெளியிட்டார்.
உலகில் அமைதிக் கலாச்சாரத்தை உருவாக்க, பல்வேறு அரசுகள் மதங்களின் உதவியை நாடுதல் அவசியம் என்று கூறிய பேராயர் சுல்லிக்காட், மனிதரின் இவ்வுலகைக் கடந்த ஆன்மீகத் தேவைகளை நிறைவு செய்யும் மதங்களின் வழி இவ்வுலகம் அமைதிக் கலாச்சாரத்தை உருவாக்க முடியும் என்று கூறினார்.
இன்றைய காலத்தில் உருவாகும் பல்வேறு வன்முறைச் செயல்களை ஆராயும் போது, மதங்களை அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தியிருப்பதே பல வன்முறைகளுக்குக் காரணம் என்பது தெரிய வரும் என்று பேராயர் விளக்கினார்.வன்முறைகள் இல்லாத நிலை அமைதி அல்ல, மாறாக அனைவருக்கும் நீதி என்ற அடிப்படையில் உருவாவதே உண்மையான, நிலையான சமாதனம் என்று தன் உரையில் வலியுறுத்தினார், ஐ.நா.விற்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பிரான்சிஸ் சுல்லிக்காட்.







All the contents on this site are copyrighted ©.