2010-10-18 16:36:21

திருப்பீடத்திற்கான எல் சால்வதோர் மற்றும் கொலம்பியாவின் புதிய தூதுவர்கள் திருத்தந்தையிடம் நம்பிக்கைச் சான்றிதழ்களை சமர்ப்பித்தனர்.


அக்.18,2010. எல் சல்வதோர் நாட்டில் தலத்திருச்சபை, மக்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக உழைப்பதோடு, அந்நாட்டின் ஏழ்மை அகற்றல், வன்முறை நீக்குதல், மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுத்தல் ஆகியவைகளுக்காகவும் செயலாற்றுவது குறித்து மகிழ்வதாக இத்திங்களன்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

திருப்பீடத்திற்கான எல் சல்வதோரின் புதிய தூதுவர் மானுவெல் ரொபெர்த்தோ லோபெஸ் பரேராவிடமிருந்து நம்பிக்கைச் சான்றிதழ்களைப் பெற்ற வைபவத்தில் உரையாற்றிய பாப்பிறை, நோயாளிகள், முதியோர், இயற்கைப்பேரிடரின் பாதிப்புக்குக்குள்ளானோர் ஆகியோர் மீதும் தலத்திருச்சபை தனி அக்கறை காட்டி பணியாற்றி வருவதையும் சுட்டிக்காட்டினார்.

வளங்கள் அனைவருக்கும் சரிசமமாக பகிரப்படல், பொதுவாழ்வில் நேர்மை, நீதிமன்றங்களின் சுதந்திரம் போன்றவைகளையும் எல் சல்வதோர் நாட்டின் திருப்பீடத்திற்கான புதிய தூதுவருக்கான உரையின்போது வலியுறுத்தினார் பாப்பிறை.

இத்திங்களன்று கொலம்பிய நாட்டின் திருப்பீடத்திற்கான புதிய தூதுவர் செசார் மௌரிசியோ வெலாஸ்குயேஸ் ஓசா வும் திருத்தந்தையிடம் நம்பிக்கைச்சான்றிதழ்களைச் சமர்ப்பித்தார்.

கொலம்பிய நாட்டில் கலாச்சாரம், கலை, நல ஆதரவு, சமூக இணக்க வாழ்வு, அமைதியைக் கட்டியெழுப்புதல் போன்றவைகளில் திருச்சபை அதிகாரிகள் விட்டுச் சென்றுள்ள அடையாளங்களைச் சுட்டிக்காட்டினார் பாப்பிறை.

கொலம்பியாவில் திருச்சபை எதிர்நோக்கும் சவால்கள் பற்றியும், நீதி மற்றும் ஒப்புரவுப் பணிகளில் அதன் ஆர்வம் குறித்தும் எடுத்தியம்பினார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.