2010-10-18 16:15:41

எப்போதும் இன்புற்றிருக்க


அக்.18,2010. “அரிது அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது. கொடிது, கொடிது, வறுமை கொடிது. அதனினும் கொடிது இளமையில் வறுமை'' என்றார் கொடிய வறுமையைச் சந்தித்த ஔவையார். இந்தக் கொடிய வறுமை பெற்றெடுக்கும் பசிக் கொடுமை பற்றிப் பாடிய குமரகுருபரர், பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்றார். அந்தப் பத்தும் என்னவெனில்......

"மானம் குலம் கல்வி வண்மை அறிவுடமை

தானம் தவமுயற்சி தாளாண்மை- தேனின்

கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்

பசிவந் திடப்பறந்து போம்''

எனவே பசி, பலநேரங்களில் ஒருவருடைய அனைத்து நல்ல குணங்களையும் இழக்கச் செய்துவிடுகிறது. அந்தத் தெருவில் வேப்ப மரத்தடியில் பத்து வயதுச் சிறுவன் ஒருவன் தனது கையைப் பிடித்தபடி வலியால் துடித்துக் கொண்டிருந்தான். அவ்விடத்தில் கூட்டமும் கூடிவிட்டது. அக்கூட்டத்திலிருந்த ஒருவர், பையன் பக்கத்துப் பள்ளிக்கூடத்து மரத்தில ஏறி விளையாடி கீழே விழுந்து கையை ஒடித்துக் கொண்டிருக்கிறான் என்றார். அங்கு நின்ற இன்னொருவர், “அவன் பாட்டிய எங்கே காணாம்”, என்றதும், “அது வேலைக்கு போயிருக்கு, சாயங்காலம்தான் வரும்” என்றார். இன்னொருவர். “தாயில்லாத அவனைப் பாட்டிதான் ஏதோ கூலிவேலை செய்து வளர்த்துக் கொண்டிருக்கிறார். எலும்புமுறிவு வைத்தியருக்குச் சொல்லுங்கப்பா” என்றார். அந்த வைத்தியர் சுற்றுபட்டியிலிருக்கும் எல்லா ஊர்க்காரர்களுக்கும் எலும்பு முறிவுக்கு கட்டுப் போட்டு வைத்தியம் செய்பவர். உடனே கூட்டத்திலிருந்த ஒருவர், தனது அலைபேசியை எடுத்து அவருக்கு விஷயத்தைச் சொன்னார். அதற்கு வைத்தியர், தான் பக்கத்து ஊரிலிருப்பதாகவும், இங்குவர இரண்டு்மணி நேரமாகும் என்றும், வலிகுறைய மாத்திரை கொடுத்து படுக்க வைக்குமாறும் கூறினார். அந்தச் சிறுவனின் பக்கத்துவீட்டுப் பெண் சோறு வடித்த கஞ்சி கொடுத்து, மாத்திரையும் கொடுத்தார். இதற்குள் அந்தச் சிறுவனின் பாட்டி தகவல் தெரிந்து அங்கே வந்து விட்டார். பாட்டி வந்த வேகத்தில் பேரனை நாலு சாத்து சாத்தியது. அறிவிருக்கா? “நா என்ன செய்வேன், வைத்தியருக்கு எப்படி ருவா குடுப்பேன், ஒவ்வொரு தடவ வைத்தியர் கட்டுப்போட வரும்போதும் அம்பது, நூறுனு குடுக்கனுமே, இப்படி தெண்டம் இளுத்து வுட்டுட்டானே” என அழுதாள்.

அந்தப் பாட்டியின் வறுமை அந்தச் சிறுவனை அந்த நிலையிலும் கை நீட்டி அடிக்க வைத்துள்ளது. அன்பர்களே, இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த போது கொடிது கொடிது வறுமை கொடிது என்றுதான் மனம் அழுதது. இந்தக் கொடிய வறுமை, பாசத்தையும் புறந்தள்ளியது. பாவம், பாட்டி என்ன செய்வார்... இந்தக் கொடிய வறுமை யாரைப் பற்றியுள்ளதோ அவர்களை அது மனித மாண்பு என்றால் என்ன? மதிப்பு என்றால் என்ன? என்று கேட்க வைக்கிறது. இந்தியாவில் ஒரு மாநிலத்தில், தான் செய்யாதக் குற்றத்திற்காகச் சிறைக்குள் இருக்கும் ஓர் இளம்தாயின் கதை வறுமை எந்த அளவுக்கு ஒருவரை நோகடிக்கும் என்று புரிய வைக்கிறது. அப்பெண் சொல்கிறார் ...

எங்கள் வீட்டில் வரிசையாக மூன்று பெண் குழந்தைகள். வறுமையும் மறவாமல் எங்களது உடன்பிறப்பாக இருந்தது. விருப்பம்போல் உடை உடுத்த, சாப்பிட, விரும்பிய இடம் செல்ல என எல்லாவற்றிலும் கட்டுப்பாடு. தட்டுப்பாடு. நான் திருமண வயதை அடைந்த போது கைவண்டியிழுக்கும் மாமனுக்குத் திருமணம் செய்து வைக்கப் பெற்றோர் தீர்மானித்தார்கள். ஆனால் ஆடம்பர, சுகபோக வாழ்க்கைக் கனவில் மூழ்கியிருந்த நான் எனது நண்பி வீட்டிலிருந்த கட்டழகனிடம் நானாகவே வலியச் சென்று பழகி திருமணமும் செய்து கொண்டேன். விரும்பிய வாழ்வு கிடைத்தது. ஆனால் எனது கரம்பிடித்த கைகள் திருட்டுத் தொழில் செய்பவை என்பதை நான் தெரிந்திருக்கவே இல்லை. எனவே இன்று நான் செய்யாதத் திருட்டுக்காகச் சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

ஆம். கொடிது கொடிது வறுமை கொடிது. இந்த வறுமையினால் சமூகங்களில் இடம் பெறும் சிறிய பெரிய குற்றங்களும் ஏராளம், ஏராளம். கடந்த வாரத்தில்கூட உரோமையில் பாதாள இரயில் நிறுத்தத்தில் வேலைக்குப் போய்க் கொண்டிருந்த ஒரு பயணியிடம் ஒரு பெண் சகஜமாகப் பேச்சுக் கொடுப்பது போல் பேசி கைப்பையைத் திருட முயன்றார். உடனே சுதாரித்துக் கொண்ட அந்தப் பயணி அந்தப் பெண்ணை கோபமாகத் தள்ளிவிட்டார். கீழே விழுந்த அந்தப் பெண் கோமா நிலைக்குப் போய் இச்சனிக்கிழமை இறந்தும் விட்டாள். ஆம். கொடிது வறுமை. அதனினும் கொடிது இளமையில் வறுமை.

குடும்பத்தின் வயிற்றுப் பசிப் போக்க, இளம் சிறுமிகள் கயிற்றில் நடக்கும் கொடுமையைக் காண்கிறோம். நூல் இழை தவறினாலும் மரணம் நிச்சயம் என்று தெரிந்தும் அதைச் செய்கிறார்கள். ஓர் ஆர்வலர் கேட்கிறார் - இந்தியா ஏவுகணை ஏவி என்ன பயன்? ஆட்சியாளர்களே, ஏழ்மையை ஒழிக்க வழி காணுங்கள். அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள். அழுகி வீணாகும் தானியங்களை அல்லல்படும் ஏழைகளுக்கு வழங்குங்கள். வேலைக்கு உத்திரவாதம் வழங்குங்கள் என்று. இந்தியாவில் பசியால் வாடும் மக்களுக்கு உணவளிக்க இயலாத தனது நிலைமை பற்றிக் காங்கிரஸ் கட்சித் தலைமையிலானத் தேசிய ஆலோசனைக் குழு அண்மையில் வருத்தம் தெரிவித்துள்ளது. அதேசமயம் தமிழகத்தில் ஏழைகள் வாழும் இரண்டாயிரம் வட்டாரங்களில் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் கிலோ மூன்று ரூபாய் விலையில் 35 கிலோ உணவுத் தானியங்களும், வறுமைக் கோட்டிற்கு மேலே உள்ள குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் 25 கிலோ உணவுத் தானியங்களும் வழங்கும் ஏற்பாடு பாராட்டப்பட வேண்டியதுதான். ஆனால் இது மட்டும் வறுமையை அகற்றி விடுமா? பசியைப் போக்கி விடுமா?

அக்டோபர் 17 இஞ்ஞாயிறன்று உலக வறுமை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. சர்வதேச அளவில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், வறுமை காரணமாக இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், பசிக் கொடுமையில் இருந்து மக்களை விடுவிப்பதற்காகவும் ஐக்கிய நாடுகள் நிறுவனம் 1992ம் ஆண்டு வறுமை ஒழிப்புத் தினத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. உலக வங்கியின் கணிப்புப்படி உலகில் 140 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்கின்றார்கள். உலகில் உள்ள ஏழைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில் வாழ்கின்றனர். அமெரிக்க ஐக்கிய நாட்டில் கடந்த 51 ஆண்டுகளில் தற்போது வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்நாட்டில் ஒரு கோடியே நாற்பது இலட்சம் முதியோர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர். ஆஸ்திரேலியாவில் பத்துப் பேருக்கு ஒருவர் வீதம் வறுமையில் வாழ்வதாகப் புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.

இந்த உலக தினத்திற்கென ஐ.நா.பொதுச் செயலர் வெளியிட்ட செய்தியில், உலகில் வேலை செய்யும் மக்களில் பாதிக்கு மேற்பட்டோர், அதாவது சுமார் 150 கோடிப் பேர் பாதுகாப்பற்ற சூழல்களில் வேலை செய்கின்றனர், உலகப் பொருளாதாரப் பிரச்சனையால் ஆறு கோடிக்கு அதிகமானோர் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர், எனவே வறுமையை அகற்ற வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும், உலகில் சுமார் நூறு கோடிப்பேர் பசியாய் வாடும் வேளை சுமார் 140 கோடிப்பேர் ஒருநாளைக்கு 1.25 டாலருக்குக் குறைவான ஊதியத்தில் வாழ்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார். இன்னும், உலக நலவாழ்வு நிறுவனத் தலைவர் டாக்டர் Margaret Chan, புறக்கணிக்கப்படும் 17 வகை வெப்பமண்டல நோய்களால் பாதிக்கப்படும் சுமார் 120 கோடி ஏழை மக்களைக் காக்க வேண்டுமானால் வறுமையைக் குறைப்பதற்குச் சரியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், 2050ல் 900 கோடியாக உயரவுள்ள உலக மக்களுக்கு உணவளிக்க உலக உணவு உற்பத்தி 70 விழுக்காடு அதிகரிக்கப்பட வேண்டும். உலகின் ஏழைகளில் பாதிப்பேர் குறுநில விவசாயிகள். உலக மக்கள் தொகையில் சுமார் 250 கோடியாக இருக்கும் இவர்கள் செய்யும் உணவு உற்பத்தி முக்கியமானது என்கிறார் ஜெனீவாவிலுள்ள FAO அலுவலக இயக்குனர் Sandra Aviles.

இதற்கிடையே, உலக மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய இன்னொரு பூமி தேவைப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலை இன்னும் இருபது ஆண்டுகளுக்குள் ஏற்படும். பூமியில் உள்ள வளங்களை மனிதர் மிகவும் அதிக அளவில் பயன்படுத்த்த் தொடங்கியுள்ளனர். கடந்த ஐம்பது ஆண்டுகளில் இயற்கை வளங்களின் நுகர்வு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் பூமியின் வளம் பாதியாகக் குறைந்து விட்டது. இந்நிலை தொடர்ந்தால் 2030ம் ஆண்டுக்குள் மனிதருக்கு மேலும் ஒரு பூமி தேவைப்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். தற்போதையச் சுற்றுச்சூழல் பாதிப்பைச் சரிப்படுத்தப் பத்து ஆண்டுகள் தேவை. அதுவும் ஆண்டுக்கு 2 முதல் 5 ட்ரில்லியன் டாலர் வரை தேவைப்படும் என்று இத்திங்களன்று ஜப்பானில் தொடங்கியுள்ள இரண்டு வார ஐ.நா. கூட்டத்தில் கூறப்பட்டது.

RealAudioMP3 இன்றைய அறிவியல் உலகம் நாளுக்கொரு சாதனைகளைப் படைத்து வருகிறது. கடந்த வாரத்தில் இத்தாலியின் மோன்சாவில் 52 வயதுப் பெண்ணுக்கு மாற்றுக் கைகள் பொறுத்தப்பட்டுள்ளன. இது உலகின் முதல் சாதனையாகும். இவ்வளவு சாதிக்கும் உலகம் வறுமையைப், பசிப்பிணியைப் போக்க இயலாமல் இருக்கின்றது. ஒருமுறை கர்ணன், கண்ணபிரானிடம், “இறைவா, இனிமேல் பிறவி வேண்டாம், இன்னொரு பிறப்பு உண்டென்றால் அப்போதும் இல்லை என்று சொல்லாத மனம் வேண்டும்” என்றாராம். முத்துப்பேறு பெற்ற அன்னைதெரேசாவிடம் ஒருவர் “அம்மா, நீங்கள் விண்ணக வாழ்விலும் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்” என்றாராம். அதற்கு அன்னை, “நரகத்திலும் நான் ஏழைகளுக்கு உதவ முடிந்தால் அங்கேயும் செல்வேன்” என்று பதில் சொன்னாராம்.

ஒருமுறை ஜெர்மனியில் கால்பந்தாட்டக்குழு ஒன்று வெற்றி அடைந்ததைக் கொண்டாட

அக்குழு அன்று இரவே சொந்த ஊருக்குப் புறப்பட்டது. கடைசி விமானத்தைப் பிடிப்பதற்காக வீரர்கள் எல்லாரும் தலைதெறிக்க ஓடினார்கள். அப்போது ஒரு வீரன் வழியில் பழக்கூடை ஒன்றை அவசரத்தில் தட்டி விட்டு ஓடிக் கொண்டிருந்தான். அவன் பின்னால் வந்த மற்றொரு வீரன் அதைப் பார்த்தான். அதை விற்றுக் கொண்டிருந்த சிறுமி பார்வையிழந்தவள் என்று கண்டு அப்பழங்களைப் பொறுக்கிக் கூடையில் வைத்தான். வீணானப் பழங்களுக்குப் பணமும் கொடுத்தான். என்னை மன்னித்துவிடு என்று சிறுமியிடம் சொல்லிவிட்டுத் திரும்பிப் பார்த்தான். மற்ற வீரர்கள் வெகு தூரம் சென்றிருந்தனர். இனி ஊர் போக முடியாது என்று வருந்தினான். அந்த நேரம் பார்த்து, நீங்கள்தான் கடவுளா என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினான் அந்த வீரன். அங்கே பார்வையிழந்த அந்தச் சிறுமி.

ஆம். கொடிது, கொடிது வறுமை கொடிது. ஆனால் வறியவர்களிடம் நாம் கருணையும் இரக்கமும் காட்டும் போதெல்லாம் இறைப்பண்பில் வளருகிறோம் அல்லவா!. ஏனெனில் இரக்கக் குணம்தானே இறைவனின் குணம். எப்போதும் இன்புற்று வாழ இதைவிடச் சிறந்த குணம் இருக்கின்றதா?








All the contents on this site are copyrighted ©.