2010-10-16 16:04:03

எல்லாக் கிறிஸ்தவ சபையினரும் ஒரே நாளில் கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவைச் சிறப்பிக்க வேண்டுகோள்


அக்.16,2010: கத்தோலிக்கர், பிரிந்த கிறிஸ்தவ சபையினர், ஆங்லிக்கன் சபையினர், ஆர்த்தடாக்ஸ் சபையினர் என எல்லாக் கிறிஸ்தவச் சபையினரும் கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவை ஒவ்வோர் ஆண்டும் ஒரே நாளில் சிறப்பிக்க ஆவன செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

வத்திக்கானில் இம்மாதம் 10ம் தேதி முதல் நடைபெற்று வரும் மத்திய கிழக்கு நாடுகளுக்கானச் சிறப்பு ஆயர் மாமன்றத்தில் பேசிய எருசலேம் இலத்தீன்ரீதி துணை ஆயர் வில்லியம் ஷோமாலி, கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவை ஆர்த்தடாக்ஸ் திருச்சபைகள் சிறப்பிக்கும் அதேநாளில் கத்தோலிக்கரும் சிறப்பிக்கும் வாய்ப்பைத் தாங்கள் நம்பிக்கையுடன் எதிர்நோக்குவதாகக் கூறினார்.

கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழாவை ஒரே நாளில் சிறப்பிப்பது என்பது, தபக்காலத்தையும் ஒரே காலத்தில் கடைபிடிப்பதாய் இருக்கும் என்றுரைத்த ஆயர் ஷோமாலி, கிழக்கு மற்றும் மேற்கில் வாழும் கத்தோலிக்கர், தபக்கால நோன்பு மற்றும்பிற தப நடவடிக்கைகளைச் சேர்ந்து செய்து சாட்சிய வாழ்வு வாழ்வதற்கு இது வாய்ப்பாக அமைகின்றது என்று விளக்கினார்.

இத்தகைய ஓர் உடன்பாட்டிற்கு உலக கிறிஸ்தவ சபைகள் மன்றமும் முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.