2010-10-16 16:37:41

அக்டோபர் 17, நாளும் ஒரு நல்லெண்ணம்


கிமு 539, அக்டோபர் 17ம் தேதி பாரசீக மன்னன் மகா சைரஸ் பாபிலோனிய அடிமைத்தனத்திலிருந்து யூதர்களை விடுவித்தார்; முதலாம் மனித உரிமைகள் அறிக்கையை வெளியிட்டார் என்பது வரலாற்றுக் குறிப்பு.
அடிமைத்தனத்தை ஒரு மனித உரிமை மீறலாகப் பார்க்காமல், அதை இயல்பான ஒரு வாழ்வு முறையாகப் பார்த்து வந்தவர்கள் மத்தியில், இம்மீறல்களைக் கண்டும் காணாமல் இருந்தவர்கள் அதிகமாய் வாழ்ந்த காலத்தில் மகா சைரஸ் போன்றவர்கள் இருந்ததை எண்ணும் போது, உள்ளம் நிறைவடைகிறது.
நாசி ஜெர்மனியில் மனித உரிமை மீறல் கொடுமைகளைக் கண்டும் காணாமல் வாழ்ந்த ஜெர்மன் நாட்டு அறிவாளிகளை மனதில் வைத்து, Martin Niemoller என்ற போதகர் கூறிய ஒரு பிரபலமான கூற்று மனதில் நிழலாடுகிறது.
முதலில் அவர்கள் யூதர்களை வேட்டையாட வந்தனர். நான் எதுவும் பேசவில்லை. ஏனெனில், நான் ஒரு யூதன் அல்ல.
அடுத்து, அவர்கள் கம்யூனிஸ்ட்களை வேட்டையாட வந்தனர். நான் எதுவும் பேசவில்லை. ஏனெனில், நான் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல.
அடுத்து அவர்கள் தொழிற்சங்கத்தினரை வேட்டையாட வந்தனர். நான் எதுவும் பேசவில்லை. ஏனெனில், நான் ஒரு தொழிற்சங்கத்தினன் அல்ல.இறுதியாக, அவர்கள் என்னை வேட்டையாட வந்தனர். அப்போது, எனக்காகப் பரிந்து பேச யாருமே இல்லை.







All the contents on this site are copyrighted ©.