2010-10-15 16:01:06

மத்திய கிழக்கு நாடுகளுக்கானச் சிறப்பு ஆயர் மாமன்றம் - எல்லைகளற்ற குருக்கள் அமைப்புக்கு வேண்டுகோள்


அக்.15,2010. மத்திய கிழக்கு நாடுகளுக்கானச் சிறப்பு ஆயர் மாமன்றத்தின் எட்டாவது பொது அமர்வு இவ்வெள்ளி காலை திருத்தந்தையின் முன்னிலையில் கீழைரீதிப் பேராயத் தலைவர் கர்தினால் லெயோனார்தோ சாந்திரி தலைமையில் காலை செபத்துடன் தொடங்கியது.

இவ்வெள்ளி காலை அமர்வில் 20 பேர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். மேலும், இம்மாதம் 10ம் தேதி முதல் நடைபெற்று வரும் இம்மாமன்ற அமர்வுகளில் எல்லைகளற்ற குருக்கள் அமைப்புக்கும் முதுபெரும் தலைவர்கள் மதிக்கப்படுவதற்கும் மாமன்றத் தந்தையர் அழைப்பு விடுத்துள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் பணி செய்வதற்கென, “எல்லைகளற்ற குருக்கள் அமைப்பு” ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென அழைப்பு விடுத்த ஆப்ரிக்காவின் Djibouti ஆயர் Giorgio Bertin, சமயத் தீவிரவாதம், சமூக நிலையற்றதன்மை ஆகியவற்றினால் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் இப்பகுதிக் கிறிஸ்தவர்களுக்கு இத்தகைய குருக்கள் அமைப்பு ஒன்று அவசியம் என்றார்.

மத்திய கிழக்குப் பகுதியின் கடும் குருக்கள் பற்றாக்குறை, அவசரகாலநிலை போன்றவற்றால் அப்பகுதியில் தன்னார்வத்துடன் பணி செய்வதற்கு விருப்பப்படும் குருக்கள் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை முன்வைத்தார் ஆயர் பெர்ட்டின். இக்குருக்கள் ஒன்பது மாதங்கள் வரை பணியாற்றலாம் என்றும் அவர் கூறினார்.

இப்பரிந்துரைக்கு, அமெரிக்க ஐக்கிய நாட்டின் Detroit பேராயர் Allen Vigneron உட்பட பரவலான ஆதரவும் மாமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.