2010-10-15 15:59:10

திருத்தந்தை:அனைத்துலக சமூகம் பசியை அகற்றுவதற்கு உண்மையிலேயே ஒன்றிணைந்து செயல்பட்டால் உலகில் வறுமையை அகற்ற முடியும்


அக்.15,2010. இன்று மனித சமுதாயத்துக்கு மிகவும் தேவைப்படும் “பசியிலிருந்து விடுதலை” வழங்குவதற்குத் தனியாள் முதல், நாடுகள், பன்னாட்டு நிறுவனங்கள் வரை ஒவ்வொருவரும் முன்னுரிமை கொடுத்துச் செயல்படுமாறு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுக் கொண்டார்.

அக்டோபர் 16, இச்சனிக்கிழமை உலக உணவு நாள் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு செய்தி வெளியிட்ட திருத்தந்தை, இவ்வாண்டு இத்தினத்திற்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள “பசியை அகற்றுவதற்கு ஒன்றிணைதல்” என்ற தலைப்பானது காலத்திற்கேற்ற கருப்பொருள் என்று கூறியுள்ளார்.

தண்ணீருக்கான உரிமையைப் பாதுகாப்பதற்குச் சர்வதேச சமுதாயம் அண்மையில் எடுத்துள்ள தீர்மானம், மனிதருக்கு உணவு அளிக்கவும், கிராமப்புற நடவடிக்கைகளுக்கும், இயற்கையைப் பாதுகாப்பதற்கும் இன்றியமையாதது என்று அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

அனைத்துலக சமூகம், பசியை அகற்றுவதற்கு உண்மையிலேயே ஒன்றிணைந்து செயல்பட்டால் உண்மையான மனித வளர்ச்சி மூலம் வறுமை அகற்றப்பட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

“1 Billion Hungry” அதாவது “ நூறு கோடிப் பசியால் வாடுவோர்” என்ற உலக உணவு மற்றும் வேளாண்மை நிறுவனத்தின் அண்மை முயற்சி, உலகில் பசியை அகற்றுவதற்கான அவசியத்தைச் சுட்டிக் காட்டுகின்றது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

உரோமையிலுள்ள FAO என்ற உலக உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் இவ்வெள்ளியன்று இவ்வுலக தினத்தைக் கடைபிடித்த நிகழ்ச்சியில் அந்நிறுவனத்திற்கானத் திருப்பீடத் தூதுவர் பேரருட்திரு Renato Volante, திருத்தந்தை அந்நிறுவன இயக்குனர் Jacques Diouf க்கு வழங்கிய இச்செய்தியை வாசித்தார்.







All the contents on this site are copyrighted ©.