2010-10-12 15:41:11

மத்திய கிழக்கு நாடுகளுக்கான முதல் சிறப்பு ஆயர் மாமன்றம்


அக்.12,2010. மத்திய கிழக்கு நாடுகளுக்கான முதல் சிறப்பு ஆயர் மாமன்றத்தின் மூன்றாவது அமர்வு இச்செவ்வாய் காலை திருத்தந்தையின் முன்னிலையில் லெபனன், அந்தியோக் முதுபெரும் தலைவர் Ignace Youssif III Younan தலைமையில் தொடங்கியது.

இக்காலை அமர்வில் 24 மாமன்றத் தந்தையர்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இம்மான்றத்தில் இத்திங்களன்று உரையாற்றிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பயங்கரவாதம், போதைப்பொருள், நிதி முதலீடும் அதோடு தொடர்புடைய கருத்துக் கோட்பாடுகள் ஆகிய அனைத்தும் தவறான கடவுள்கள், அந்தக் கடவுள்களின் முகமூடிகள் கிழிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உண்மையான ஞானத்தின் எளிமையான விசுவாசமே திருச்சபையின் பலம் என்று தனது உரையைத் தொடங்கிய திருத்தந்தை, திருவெளிப்பாட்டுப் புத்தகத்தின் 12ம் பிரிவைக் குறிப்பிட்டு இந்தத் தவறானக் கடவுள்கள் வீழ்த்தப்பட வேண்டும் என்றார்.

இன்று பணமுதலீடுகள் மனிதனை அதன் அடிமைகளாக ஆக்கியுள்ளன எனவும், இந்த அழிக்கும் சக்தி உலகை அச்சுறுத்திக் கொண்டு இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே இவ்வேளையில் திருப்பாடல் ஆசிரியருடன் இணைந்து, ஆண்டவரே, இந்த உலகை உமது கரங்களில் எடுத்துக் கொள்ளும், உமது திருச்சபையையும் மனித சமுதாயத்தையும் இப்பூமியையும் காப்பாற்றும் எனச் செபிப்போம் என்றார் திருத்தந்தை.

மேலும், இத்திங்கள் அமர்வுகளில் மனித உரிமைகள், சமய சுதந்திரம், எல்லா மக்களின் நேர்மையான குடியுரிமையை அங்கீகரித்தல் போன்ற தலைப்புகளில் கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

குடும்பத்தை மேம்படுத்துதல், மனித வாழ்வைப் பாதுகாத்தல் ஆகியவை திருச்சபையின் போதனைகளிலும் பணியிலும் மையமாகவும், நமது செயல்களில் கல்வி தனிச்சலுகை பெற்றதாகவும் விளங்க வேண்டும் என்று பேசினார் எகிப்தின் அலெக்சாந்திரியாவின் காப்டிக் ரீதி திருச்சபையின் முதுபெரும் தலைவர் Antonios Naguib.








All the contents on this site are copyrighted ©.