2010-10-12 15:40:06

புதிய நற்செய்திப்பணியை ஊக்குவிப்பதற்கான திருப்பீட அவை புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது


அக்.12,2010.விசுவாசம் தளர்ந்து காணப்படும் ஐரோப்பாவிலும் பிறப் பாரம்பரியக் கிறிஸ்தவப் பகுதிகளிலும் நற்செய்திப் பணியை மீண்டும் ஊக்குவிப்பதற்கென, புதிய நற்செய்திப்பணிக்கானத் திருப்பீட அவையை இச்செவ்வாயன்று உருவாக்கியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இப்புதிய அவை, திருச்சபையின் கோட்பாடுகளைப் பரப்புவதற்கு ஆயர்களோடு இணைந்து பணி செய்யும் எனவும், திருச்சபையின் செய்திகள் புதிய சமூகத் தொடர்பு சாதனங்கள் மூலம் வெளியிடப்படுவதற்கும், துறவு சபைகள் மற்றும் புதிய சமய இயக்கங்களைப் பயன்படுத்தி திருச்சபையின் மறைப்பணி நடவடிக்கைகளை வளர்க்கவும் இவ்வவை செயல்படும் என்று இந்த அப்போஸ்தலிக்க ஆணையில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

“Motu proprio” Ubicumque et semper என்ற அப்போஸ்தலிக்க ஆணையின் மூலம் திருத்தந்தை உருவாக்கியுள்ள இத்திருப்பீட புதிய நற்செய்திப்பணி அவை, கிறிஸ்தவத்தை உயிர்த்துடிப்புள்ளதாக்குவதற்குத் திருத்தந்தை எடுத்துள்ள மிக உன்னத முயற்சியாக இருக்கின்றது என்று இப்புதிய அவையின் தலைவர் பேராயர் Rino Fisichella நிருபர் கூட்டத்தில் கூறினார்.

இப்புதிய அவையை உருவாக்குவது குறித்தத் திருத்தந்தையின் அப்போஸ்தலிக்க ஆணை, இலத்தீன் மற்றும் இத்தாலிய மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அவை, ஆங்கிலம், ஸ்பானியம், ப்ரெஞ்ச், போர்த்துக்கீசியம், இத்தாலியம், ஜெர்மன் மற்றும் ஸ்லாவிய மொழிகளில் இயங்கும் என்று பேராயர் Fisichella தெரிவித்தார்







All the contents on this site are copyrighted ©.